Sunday 23 October 2016

சட்டங்களும் தீர்ப்பும்-கொரட்டூர் ஏரி தீர்ப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் வரிகள்.. ஒவ்வொரு ஏரி குளத்தையும் மீட்க நம்பிக்கையூட்டும் வரிகள்..

25 ஆண்டுகளாக அவர்கள் வசம் இடம் இருந்தாலும், அவர்களுக்கு எந்த உரிமையும் வந்து விடாது; அவர்கள், ஆக்கிரமிப்பாளர்களாகத் தான் கருதப்படுவர். நீர்நிலைகளிலிருந்து ஆக்கிரமிப்புக்களையும் அரசு உடனே அப்புறப்படுத்தவேண்டும். அப்படி அப்புறப்படுத்தும்பொழுது எந்த வகையான நஷ்ட ஈட்டையும் அரசு ‘ஆக்கிரமிப்பாளர்களுக்கு’ கொடுக்க தேவை இல்லை. அப்படி நஷ்டஈடு கேட்பதற்கு ‘ஆக்கிரமிப்பாளர்களுக்கு’ எந்த விட உரிமையும் இல்லை.

நீண்ட நாட்களாக நீர்நிலைகளை ‘ஆக்கிரமித்து’ குடியிருந்து வருபவர்களுக்கு அரசு இதுவரை பட்டா, அப்ரூவல் என எந்த அனுமதி கொடுத்திருந்தாலும், அவை செல்லாது. அப்படி அனுமதி கொடுத்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.    

நீர் நிலைகளை பாதுகாக்கும் சட்டத்தை மறந்து விட்டு, வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கை ஆதாரங்களை அரசு மறைக்கும் போது, அரசுக்கு எதிராக, மக்கள் கையை உயர்த்துகின்றனர்

ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை மீட்கும் படி, 2005 ஜூனில், உயர் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. அதிகாரிகளின் தவறால், உயிரிழப்பும், நிதி இழப்பும், 2005 அக்டோபரில் ஏற்பட்டது.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்கு, தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின்பற்றிய நடைமுறையும் தான் காரணம்.

நீர் நிலைகளை காக்கும் நோக்கிலும், சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டம், 2007ல் கொண்டு வரப்பட்டது.


இந்த வழக்கில், ஏரிக்குள் நீண்டகாலமாக இருப்பதாக கூறுவதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கபடவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த இடத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை. ஏனென்றால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி கொள்ள கடந்த 2006ம் ஆண்டு அரசு போட்ட அரசாணை தற்பொழுது மழை நீர் வடியாமல் ஒட்டுமொத்த தமிழக மக்கள் சிக்கித்தவிக்கும் சூழ்நிலை இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. இந்த ஆக்கிரமிப்புக்கு கம்யூ., கட்சிகளும் பேராதரவு வழங்கியதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு அரசு டிசம்பர் 30ம் தேதி வெளியிட்ட அரசாணை மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசாணையில் நிர்வழி புறம்போக்கு நிலங்கள் என வகைப்படுத்தி 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளை கட்டி குடியிருப்பவர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில் நீர் நிலை புறம்போக்கு என வகைபாடு செய்யப்பட்டுள்ள நிலங்கள் அரசுக்கு தேவைப்படாத நிலம் தான் என உறுதி படுத்திக்கொண்டு பட்டா வழங்கலாம் என அரசு அறிவித்தது. இதனை பயன்படுத்திக்கொண்டு அரசியல் கட்சிகள் ஏரிகள், குளங்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்து விட்டன.

இதனை மக்களுக்கு வெளிச்சம் காட்டும் வகையில் மா.கம்யூ., சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கொரட்டூர் ஏரிப்பகுதியில் சுமார் 3400 வீடுகள் உள்ளன. ஏரிப்பகுதிகளை ஆக்கரமித்துள்ள இவர்களுக்கு பட்டா வழங்கி முறைபடுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கி முழு பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் பட்டா வழங்க முடியாது என அதிரடியாக உத்தரவிட்டது.

வழக்கு விவரம்: நீர் நிலைகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாததால், அதனை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

இது தொடர்பாக, வட சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு செயலாளர் டி.கே.சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக வருவாத்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில், ஆக்கிரமிப்புகளை வரைமுறைப் படுத்துவதற்காக, அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. அதற்கு,  2007-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.   

இந்த அரசாணைப்படி,  சென்னையில் மட்டும் சுமார் 40,000 பேர் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். பின்னர், இந்தத் திட்டம் 2009-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.  இந்த உத்தரவுக்கு பின்னர், ஏரியை ஆக்கிரமித்து இருந்தவர்களும் பட்டா கேட்டு விண்ணப்பித்த பிறகு, துப்பணித்துறையினர் ஏரியிலிருந்து வெளியேறுமாறு அவர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பினர்.

அவ்வாறு ஏரிகளில் ஆக்கிரமித்துள்ளவர்கள் வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பகுதியில் கொரட்டூர் ஏரியும் ஒன்று. இது தவிர, சென்னை குடிநீர் வாரியமே அந்த ஏரியில் கழிவுகள் கலப்பதால் அங்குள்ள நீர் குடிப்பதற்கு தகுதியற்றது என அறிவித்துள்ளது. தவிர, ஏரியைச் சுற்றி எந்த விவசாயப் பணிகளும் நடைபெறுவதில்லை.

மேலும், கொரட்டூர் ஏரி பகுதியில் சுமார் 3,400 வீடுகள் உள்ளன. அதில் 900 வீடுகளுக்கு பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனவே, கொரட்டூர் ஏரிப்பகுதியில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு 2006-ஆம் ஆண்டு அரசாணைப்படி பட்டா வழங்கி, ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முழு பெஞ்ச் விசாரித்து உத்தரவிட்டது. அதில், ’ நீர் நிலைகளில் கோடை காலத்தில் நீர் இருப்பு குறைந்து போகும். மழைக்காலங்களில் மீண்டும் நீர்மட்டம் உயரும். அதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

இந்த நிலையில், பயன்பாட்டில் இல்லாத நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்தலாம் என அரசு கருதி உள்ளது. ஆனால், அவ்வாறான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் ஏன் பயன்படுத்தாத நிலைக்கு தள்ளப்பட்டன என்பதை அரசு கருத்தில் கொள்ள தவறிவிட்டது. அதை ஆராய்ந்தால், பல நீர்நிலைகள் மனிதர்களால் பயன்படுத்தாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டதும், அந்தச் செயல் திட்டமிட்டே அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டதும் தெரியவரும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு அரசாணைகளை பிறப்பித்துள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த உத்தரவுகள் அனைத்தும் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளவர்களை ஊக்கப்படுத்தவதாக உள்ளது. எனவே, நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன என்ற காரணத்துக்காக அங்கு ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கமுடியாது என்று கூறி, மீண்டும்  இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, வாழ்க்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை கொளத்தூரில் உள்ள காந்தி நகர், கண்ணகி நகர், என்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டா கேட்டு தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ’நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லை என்பதற்காக, அங்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு பட்டா வழங்க உரிமை கோர முடியாது. ஏரி புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, 2006 ஆம் ஆண்டு அரசாணைப்படி பட்டா வழங்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் ஏரிகள் பட்டா போட்டு கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறது. எனவே, கொளத்தூர் பகுதியில் உள்ள கொரட்டூர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், பட்டா கேட்டு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

பசுமைத் தீர்ப்பாய விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நீர்நிலைகள் வறண்டாலும், அவற்றை வேறு எந்த தேவைக்காகவும் மாற்றக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்திரகுமார் பேசும் போது, “அண்மைக் காலமாக நீர்நிலை கள் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இவை நீதிமன்றத்தில் வழக்காக வரும்போது, நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிக்க நேர்கிறது. இதனால் வாழ்நாள் முழுதும் சேமித்த பணத்தைக் கொண்டு, நீர்நிலைகளில் கட்டப்பட்ட வீடுகளை வாங்குவோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், கிராம அளவில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம்” என்றார்.

No comments:

Post a Comment