Sunday 23 October 2016

நீர் போராட்ட கதைகள் - ராஜபாளையம் நர்மதா

சென்னை அண்ணா நகர் திருவல்லீஸ்வரர் காலனி மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நர்மதா(38). இவர்களுக்கு, மகன், மகள் உள்ளனர்.

எம்.ஏ., எம்.பில்., பொருளாதாரம் படித்த நர்மதா, சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு வேலையை விட்டுவிட்டு, பொது சேவையாற்ற விரும்பியுள்ளார்.



கடந்த 26-ம் தேதி அம்பத்தூர் ஏரிக்குச் சென்ற நர்மதா, அங்கு செடி கொடிகள் மண்டி, தண்ணீர் செல்ல வழியில்லாமல் இருப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாக, தனி ஆளாக களத்தில் இறங்கி, அங்கு மண்டிக் கிடந்த செடி, கொடிகளை அகற்றியுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

தகவலறிந்து வந்த அரசு அலுவலர்கள் அந்த ஏரியை தாங்களே சுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளனர். தனது முயற்சிக்கு உடனடி பலன் கிடைத்ததால் உற்சாகமடைந்த நர்மதா, மற்ற இடங்களிலும் இதேபோல மாற்றத்தை ஏற்படுத்த விரும்பியுள்ளார்.

இதையடுத்து, நேற்று பேருந்தில் தஞ்சாவூருக்கு வந்த நர்மதா, நகரின் நுழைவுப் பகுதியான கொடிமரத்து மூலை அருகே, தஞ்சாவூர் பெரிய கோட்டை அகழியில், ஆகாயத் தாமரை மற்றும் செடிகள் மண்டிக் கிடப்பதை பார்த்துள்ளார். பேருந்திலிருந்து இறங்கிய நர்மதா, தனி ஆளாக அவற்றை அகற்றத் தொடங்கினார். பொதுமக்கள் திரண்டு ஆர்வத்துடன் பார்த்தனர். பலரும் பாரட்டினர்.

இதுகுறித்து நர்மதா கூறும்போது, “நான் பிறந்தது சென்னை. எனது கணவரின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சொக்கலிங்கபுரம். ராஜபாளையம் முழுவதுமே தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர். அங்கு தண்ணீருக்காக மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. அதன் தாக்கம் என்னைத் தொடர்ந்தது. எனவே, நீர்நிலைகளை காக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கடந்த மாதம் அம்பத்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். அதைத் தொடர்ந்து, நேற்று தஞ்சாவூர் அகழியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டேன். இது மோசமான நிலையில் உள்ளது. கழிவு நீர் தேங்கி, கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, பாராட்டினாலும், தூய்மைப் பணிக்கு யாரும் முன்வராதது வருத்தமளிக்கிறது. மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இதைச் செய்கிறேன். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு ஊருக்குச் செல்வேன். அடுத்ததாக, வேறு ஊரில் எனது பணியை தொடர்வேன்.

தமிழகத்தில் உள்ள 39,400 ஏரி, குளங்களில், பாதிக்கு மேல் இதேபோன்ற நிலையில் உள்ளன. வெறுமனே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதை விட, களத்தில் இறங்கினால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்கிறார் நர்மதா.

நன்றி: தமிழ் ஹிந்து நாளிதழ் 

சட்டங்களும் தீர்ப்பும்-கொரட்டூர் ஏரி தீர்ப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் வரிகள்.. ஒவ்வொரு ஏரி குளத்தையும் மீட்க நம்பிக்கையூட்டும் வரிகள்..

25 ஆண்டுகளாக அவர்கள் வசம் இடம் இருந்தாலும், அவர்களுக்கு எந்த உரிமையும் வந்து விடாது; அவர்கள், ஆக்கிரமிப்பாளர்களாகத் தான் கருதப்படுவர். நீர்நிலைகளிலிருந்து ஆக்கிரமிப்புக்களையும் அரசு உடனே அப்புறப்படுத்தவேண்டும். அப்படி அப்புறப்படுத்தும்பொழுது எந்த வகையான நஷ்ட ஈட்டையும் அரசு ‘ஆக்கிரமிப்பாளர்களுக்கு’ கொடுக்க தேவை இல்லை. அப்படி நஷ்டஈடு கேட்பதற்கு ‘ஆக்கிரமிப்பாளர்களுக்கு’ எந்த விட உரிமையும் இல்லை.

நீண்ட நாட்களாக நீர்நிலைகளை ‘ஆக்கிரமித்து’ குடியிருந்து வருபவர்களுக்கு அரசு இதுவரை பட்டா, அப்ரூவல் என எந்த அனுமதி கொடுத்திருந்தாலும், அவை செல்லாது. அப்படி அனுமதி கொடுத்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.    

நீர் நிலைகளை பாதுகாக்கும் சட்டத்தை மறந்து விட்டு, வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கை ஆதாரங்களை அரசு மறைக்கும் போது, அரசுக்கு எதிராக, மக்கள் கையை உயர்த்துகின்றனர்

ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை மீட்கும் படி, 2005 ஜூனில், உயர் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. அதிகாரிகளின் தவறால், உயிரிழப்பும், நிதி இழப்பும், 2005 அக்டோபரில் ஏற்பட்டது.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்கு, தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின்பற்றிய நடைமுறையும் தான் காரணம்.

நீர் நிலைகளை காக்கும் நோக்கிலும், சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டம், 2007ல் கொண்டு வரப்பட்டது.


இந்த வழக்கில், ஏரிக்குள் நீண்டகாலமாக இருப்பதாக கூறுவதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கபடவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த இடத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை. ஏனென்றால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி கொள்ள கடந்த 2006ம் ஆண்டு அரசு போட்ட அரசாணை தற்பொழுது மழை நீர் வடியாமல் ஒட்டுமொத்த தமிழக மக்கள் சிக்கித்தவிக்கும் சூழ்நிலை இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. இந்த ஆக்கிரமிப்புக்கு கம்யூ., கட்சிகளும் பேராதரவு வழங்கியதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு அரசு டிசம்பர் 30ம் தேதி வெளியிட்ட அரசாணை மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசாணையில் நிர்வழி புறம்போக்கு நிலங்கள் என வகைப்படுத்தி 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளை கட்டி குடியிருப்பவர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில் நீர் நிலை புறம்போக்கு என வகைபாடு செய்யப்பட்டுள்ள நிலங்கள் அரசுக்கு தேவைப்படாத நிலம் தான் என உறுதி படுத்திக்கொண்டு பட்டா வழங்கலாம் என அரசு அறிவித்தது. இதனை பயன்படுத்திக்கொண்டு அரசியல் கட்சிகள் ஏரிகள், குளங்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்து விட்டன.

இதனை மக்களுக்கு வெளிச்சம் காட்டும் வகையில் மா.கம்யூ., சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கொரட்டூர் ஏரிப்பகுதியில் சுமார் 3400 வீடுகள் உள்ளன. ஏரிப்பகுதிகளை ஆக்கரமித்துள்ள இவர்களுக்கு பட்டா வழங்கி முறைபடுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கி முழு பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் பட்டா வழங்க முடியாது என அதிரடியாக உத்தரவிட்டது.

வழக்கு விவரம்: நீர் நிலைகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாததால், அதனை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

இது தொடர்பாக, வட சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு செயலாளர் டி.கே.சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக வருவாத்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில், ஆக்கிரமிப்புகளை வரைமுறைப் படுத்துவதற்காக, அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. அதற்கு,  2007-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.   

இந்த அரசாணைப்படி,  சென்னையில் மட்டும் சுமார் 40,000 பேர் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். பின்னர், இந்தத் திட்டம் 2009-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.  இந்த உத்தரவுக்கு பின்னர், ஏரியை ஆக்கிரமித்து இருந்தவர்களும் பட்டா கேட்டு விண்ணப்பித்த பிறகு, துப்பணித்துறையினர் ஏரியிலிருந்து வெளியேறுமாறு அவர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பினர்.

அவ்வாறு ஏரிகளில் ஆக்கிரமித்துள்ளவர்கள் வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பகுதியில் கொரட்டூர் ஏரியும் ஒன்று. இது தவிர, சென்னை குடிநீர் வாரியமே அந்த ஏரியில் கழிவுகள் கலப்பதால் அங்குள்ள நீர் குடிப்பதற்கு தகுதியற்றது என அறிவித்துள்ளது. தவிர, ஏரியைச் சுற்றி எந்த விவசாயப் பணிகளும் நடைபெறுவதில்லை.

மேலும், கொரட்டூர் ஏரி பகுதியில் சுமார் 3,400 வீடுகள் உள்ளன. அதில் 900 வீடுகளுக்கு பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனவே, கொரட்டூர் ஏரிப்பகுதியில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு 2006-ஆம் ஆண்டு அரசாணைப்படி பட்டா வழங்கி, ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முழு பெஞ்ச் விசாரித்து உத்தரவிட்டது. அதில், ’ நீர் நிலைகளில் கோடை காலத்தில் நீர் இருப்பு குறைந்து போகும். மழைக்காலங்களில் மீண்டும் நீர்மட்டம் உயரும். அதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

இந்த நிலையில், பயன்பாட்டில் இல்லாத நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்தலாம் என அரசு கருதி உள்ளது. ஆனால், அவ்வாறான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் ஏன் பயன்படுத்தாத நிலைக்கு தள்ளப்பட்டன என்பதை அரசு கருத்தில் கொள்ள தவறிவிட்டது. அதை ஆராய்ந்தால், பல நீர்நிலைகள் மனிதர்களால் பயன்படுத்தாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டதும், அந்தச் செயல் திட்டமிட்டே அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டதும் தெரியவரும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு அரசாணைகளை பிறப்பித்துள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த உத்தரவுகள் அனைத்தும் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளவர்களை ஊக்கப்படுத்தவதாக உள்ளது. எனவே, நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன என்ற காரணத்துக்காக அங்கு ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கமுடியாது என்று கூறி, மீண்டும்  இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, வாழ்க்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை கொளத்தூரில் உள்ள காந்தி நகர், கண்ணகி நகர், என்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டா கேட்டு தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ’நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லை என்பதற்காக, அங்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு பட்டா வழங்க உரிமை கோர முடியாது. ஏரி புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, 2006 ஆம் ஆண்டு அரசாணைப்படி பட்டா வழங்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் ஏரிகள் பட்டா போட்டு கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறது. எனவே, கொளத்தூர் பகுதியில் உள்ள கொரட்டூர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், பட்டா கேட்டு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

பசுமைத் தீர்ப்பாய விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நீர்நிலைகள் வறண்டாலும், அவற்றை வேறு எந்த தேவைக்காகவும் மாற்றக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்திரகுமார் பேசும் போது, “அண்மைக் காலமாக நீர்நிலை கள் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இவை நீதிமன்றத்தில் வழக்காக வரும்போது, நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிக்க நேர்கிறது. இதனால் வாழ்நாள் முழுதும் சேமித்த பணத்தைக் கொண்டு, நீர்நிலைகளில் கட்டப்பட்ட வீடுகளை வாங்குவோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், கிராம அளவில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம்” என்றார்.

நீர் போராட்ட கதைகள்-கருப்பூர் தாய் ஏரி மீட்பு

சேலம் மாவட்டம், கருப்பூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட, கருப்பூர் பனங்காடு ஏரி, 30க்கும் மேற்பட்ட, கிராமங்களின் நீராதாரமாக, அப்போது விளங்கியது. சேலம், ஏற்காடு மலையில் இருந்து வரும் நீரானது, மேக்னசைட் பகுதிகளின் வழியாக, கருப்பூர் பனங்காடு ஏரிக்கு வந்து சேர்ந்தது.

கருப்பூர், மீர் சமுத்திரம் ஏரி, குள்ளக்கவுண்டனூரில் உள்ள சமுத்திரம் ஏரி, மாங்குப்பை ஏரி, செல்லபிள்ளை குட்டை, முத்துநாயக்கன் பட்டி ஏரி, பழையூர் ஏரி உள்ளிட்ட, சுமார் 30க்கும் மேற்பட்ட கிளை ஏரிகளின், பிறப்பிடமாக விளங்குவதால், கருப்பூர், பனங்காடு ஏரியை, அப்பகுதி மக்கள், "தாய் ஏரி' என்று அழைக்கின்றனர்.இது, 30க்கும் மேற்பட்ட ஏரிகளின் வழியாகச் சென்று, பல்வேறு கிராமங்களின் நீராதாரமாக விளங்கி, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்பட்டு கடைசியில், பூலாம்பட்டி ஏரியில் கலந்து, காவிரி ஆற்றில் கலக்கும். அந்த காலத்தில், சேலத்தின் குடிநீர் தேவையை தீர்க்க, பனங்காடு ஏரியில் உள்ள தண்ணீரை, சேலத்திற்கு கொண்டு வர, திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், கருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மேக்னசைட் வெட்டி எடுக்க தொடங்கினர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொடங்கி, இன்று வரை, ஏறக்குறைய, 70 ஆண்டுகளுக்கும் மேலாக, மேக்னசைட் எடுக்கப்பட்டு வருகிறது. மேக்னசைட் நிறுவனம், இப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், ஏற்காட்டில் இருந்து வரும் நீர் வழிகளையும் சிதைத்தது.இதன் விளைவாக, ஏற்காட்டில் இருந்து வரும் நீர் சிறிது, சிறிதாக குறைந்து, கடந்த, 32 ஆண்டுகளுக்கு முன், தாய் ஏரிக்கு நீர் வருவது நின்று போனது. இதன் எதிரொலியாக, தாய் ஏரியின் கிளை ஏரிகளும் முழுமையாக வறண்டு விட்டது. நீர் வழிப்பாதையை சரி செய்து, ஏரியை சீரமைக்க, கருப்பூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து, பல்வேறு போராட்டம் நடத்தியும், எவ்வித பலனும் இல்லை.

இன்று இப்பகுதி, 1,000 அடிக்கு மேலே, ஆழ்துளை கிணற்றில், "போர்' போட்டாலும், நீர் இல்லை என்ற நிலைக்கு மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த, 2008ல், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை கொண்டு, "கருப்பூர் ஏரி பாதுகாப்பு இயக்கம்' உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பின் மூலம், ஆர்.டி.ஓ., தாசில்தார், கலெக்டர் ஆகியோருக்கு தொடர்ச்சியாக மனு அனுப்பபட்டது. அவர்களும் வந்து பார்வையிட்டு, சரி செய்து கொடுப்பதாக, வாக்குறுதி கொடுத்துச் சென்றுள்ளனர்.ஏரி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், பல்வேறு உண்மைகளையும், மேக்னசைட் பகுதியில் சட்ட விரோதமாக, ஆக்கிரமிப்பு செய்து அழிக்கப்பட்டிருப்பதையும், வெளிக்கொணர்ந்தனர். இதன் பின்னர், செயில் நிறுவனம், தன் தவறுகளை திருத்திக் கொள்ள, முன் வந்தது. அதன்படி, ஏரியை சீரமைக்க, செயில் நிறுவனம் தன்னுடைய இயந்திரங்களை, இலவசமாக கொடுத்தது.

கருப்பூர் விவசாயிகளும் செலவை ஏற்றுக்கொள்ள, கருப்பூர் ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் அழிந்து போன, நீர் வழிகளை கண்டுபிடித்தனர். அதன் பிறகு, இந்தியாவிலேயே முதன் முறையாக, கனிம பகுதியில், நீரோடை சீரமைக்கும் பணி தொடங்கியது. கடந்த, ஆறு மாதங்களாக, கருப்பூர் ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் கடுமையாக உழைத்தனர்.இந்த கடின உழைப்பின் பலனாக, கடந்த சில நாட்களாக, தொடர்ந்து பெய்த கோடை மழையால், தற்போது, செயில் நிறுவன, எல்லை முடிவில் உள்ள தடுப்பணை, முழுமையாக நிரம்பி, கருப்பூர் தாய் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இது திட்டமிட்ட வேலையில், வெறும், 25 சதவீதம் மட்டுமே, முடிவடைந்த நிலையில், தற்போது நீர் வந்தள்ளது.இந்த நீரோடை, ஏற்காடு அடிவாரத்தில் உள்ள, சிறு குறு நீரோடைகளுடன் இணைக்கப்படுதல், அழிந்த ஓடைகளை திரும்ப உருவாக்குதல் போன்ற, 75 சதவீதம் பணி மீதம் இருக்கிறது. இந்தப்பணி முழுமையாக முடிவடைந்தால், தாய் ஏரி, தன் அனைத்து பிள்ளைகளுக்கும், நீர் வழங்குவதோடு, காவிரிக்கும் நீர் தருவாள் என்பதில் ஐயமில்லை.

ஏரி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், விஜயராகவன் உள்ளிட்ட, 15 உறுப்பினர்கள் கூறியதாவது:ஏரி பாதுகாப்பு இயக்கம் மற்றும் சேலம் மக்கள் குழு, விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து இப்பணிகளை மேற்கொண்டோம். மீதமுள்ள, 75 சதவீதம் பணி தொடந்து செய்ய, செயில், டான்மேக், டால்மியா ஆகிய அனைத்து நிறுவனங்களும், தங்கள் பகுதியில் உள்ள விதிகளை மீறி அழிக்கப்பட்ட ஓடைகளை சரி செய்ய வேண்டும். மேலும், இது போன்று உள்ள கிராமங்களில் பொதுமக்களாகவே, களத்தில் இறங்கி, ஏரிகளை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.

400 ஏக்கர் பாசன வசதி : சேலம், கருப்பூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள, "தாய் ஏரி' 58 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கிருந்து செல்லும் நீர், 30க்கும் மேற்பட்ட கிளை ஏரிகளின் வழியாக சென்று, பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. தாய் ஏரி மூலம், கருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 30 கி. மீட்டர் தொலைவில், 400 ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. செயில் நிறுவன எல்லையில் உள்ள, 6 அடி உயரம் தடுப்பணை மூலம் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம், அங்குள்ள விவசாய பகுதிகளுக்கு, மழை இல்லாத காலங்களிலும், பாசன வசதி கிடைக்கிறது.

நன்றி: தமிழ்மித்ரன்

சட்டங்களும் தீர்ப்புகளும்-தாம்பரம் 5 ஏரிகள்

 தாம்பரம் தாலுகாவில் 5 ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு மற்றும் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவதாக தேர்தலின் போது அமைச்சர் சின்னையா வாக்குறுதி அளித்தார். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவ மழை கொட்டி தீர்த்தபோது, தாம்பரம் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சில ஏரி உடைந்ததாலும், உபரிநீர் வெளியேறியதாலும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் கடுமையான துன்பத்துக்கு ஆளானார்கள். பெரும்பாலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள்தான் இதுபோன்ற பாதிப்புக்கு காரணம் என அனைவரும் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து தாம்பரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏரிகள், தாங்கல், குளம், குட்டை உள்ளிட்ட பகுதிகளில் எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தாம்பரம் வருவாய் துறை சார்பில் அறிக்கை தயாரித்து, மாவட்ட கலெக்டருக்கு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கீடு மற்றும் அளவீடு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தாம்பரம் நகராட்சி எல்லையில் உள்ள சேலையூர், இரும்புலியூர், தாம்பரம், கடப்பேரி, புலிக்கொரடு ஆகிய 5 பெரிய ஏரிக்கரைகளின் நீளம், அகலம் எவ்வளவு, அவைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் எவ்வளவு என கணக்கெடுக்கப்பட்டது.



மேலும் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறும் வழி, கலங்கல் பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதா, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளவை கல் வீடுகளா, குடிசைகளா, கடைகளா, வணிக வளாகங்களா என்ற ரீதியிலும் இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போது, அமைச்சர் சின்னையா, ‘‘ஏரி பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்’’ என உறுதியளித்தார். 

அவர் வெற்றி பெற்று அமைச்சரான பிறகு அதை செய்யவில்லை. ‘‘உள்ளாட்சியில் திமுகவினரே அதிகளவில் உள்ளனர். அதனால் நாம், எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வையுங்கள்’’ என்று உள்ளாட்சி மன்ற தேர்தலின்போது அமைச்சர் சின்னையா, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதை நம்பி உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் அதிமுகவை பொதுமக்கள் வெற்றி பெற வைத்தனர். அதற்கு பிறகும் ஏரி பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.



இந்நிலையில், தற்போது ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கணக்கீடு மற்றும் அளவீடு பணி நடப்பதால் இங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். அதே நேரத்தில், ஆளுங்கட்சி மீதும் குறிப்பாக அமைச்சர் சின்னையா மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வார்டுகளான ஏரி பகுதிகள்

தாம்பரம் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. அவற்றில் கடப்பேரி ஏரியில் 1, 2, 4, 5, 6, 7, 8 இரும்புலியூர் ஏரியில் 25, 26,27, சேலையூர் ஏரியில் 22, 23, தாம்பரம் ஏரியில் 28, 29, 30, 34 ஆகிய வார்டுகள் உள்ளன. சில வார்டுகள் பாதி அளவு ஏரியின் வெளிப்புறம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். மாடி, குடிசை, கடைகள், வணிக வளாகங்கள் என பல்வேறு கட்டிங்கள் இந்த ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

நன்றி: தினகரன்

ஏரிகள் ஆக்கிரமித்தால் அமைச்சர் வாக்குறுதி கூட செல்லாது

சேலையூர் ஏரியில் ஆக்கிரமிப்பாளர்கள் 1400 பேருக்கு நோட்டிஸ் அனுப்பட்டது. 

சட்டங்கள் தீர்ப்புகள் - ஒழலூர் ஏரி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் போராட்டத்தினால் ஒழலூர் ஏரியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீட்டுமனைப் பிரிவுகள் அகற்றப் பட்டன.மாற்றப்பட்ட பகுதி தற்போது மாவட்ட நிர்வாகத்தால் நீர்பிடிப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த ஒழலூர் கிராமத்தில் 196 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி புதுப்பாக்கம், ஒழலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இந்த ஏரியை, நீர்வள நிலவளத் திட்டத்தில் சீரமைக்க மாவட்டநிர்வாகம் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் பரிந்துரைக்கு அனுப்பிவைத்திருந்தது.



இந்நிலையில் இந்த ஏரியின் நீர் பிடிப்புப் பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கும் மேல் நிலத்தை ஒருசிலர் முறைகேடாக பட்டா பெற்று வைத்திருந்தனர்.கரடு முரடான பகுதியை இயந்திரங்களை வைத்து சமன் செய்து கல்நட்டு வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இதற்கு சில அரசு அதிகாரிகளும் துணை போனார்கள். இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சிறப்பு அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழுவை அனுப்பி ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து, ஏரியில் போடப்பட்டுள்ள வீட்டுமனைகளை காலி செய்து, ஏரியைப் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஏரியில் பட்டா இல்லாத இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது. இருந்த போதிலும் ஏரியில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீட்டுமனைகளையும் அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஏரியை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்தனர். அதனடிப்ப டையில் மாவட்ட வருவாய் அலுவலர் சௌரிராஜன் பிறப்பித்துள்ள அரசு ஆணையில் ஒழலூர் புதுப்பாக்கம் ஏரியில் முழுமையாக அளவீடு செய்து தணிக்கை செய்யப்பட்டபோது அதில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என்றும் மேற்படி ஏரியை ஒட்டியுள்ள பட்டாநிலங்களில் நீர் நிரம்பும்போது நீரால் சூழப்பட்டு காணப்படும் என்றும் மேற்படி பட்டா நிலங்கள் யுடிஆர் திட்டத்திற்கு முந்தைய பதிவுகளில், ஏரிநீர் முழுக்கடை, என பதிவு செய்யப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் மேற்கண்ட நிலங்களை நீர் முழுக்கடை (நீர்பிடிப்பு) பகுதியாக பதிவு செய்ய வேண்டும் என்று நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விவசாயிகள் சங்கம் வரவேற்பு

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேருவிடம் கேட்டபோது ஏரியில் வீட்டுமனைகளாக மாற்ற முயன்ற இடத்தை நீர்பிடிப்பு பகுதியாக ஆவணங்களில் பதிவு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நீர்பிடிப்பு பகுதியில் பட்டா வைத்துள்ளவர்கள் நீர்பிடிப்பு இல்லாத நேரத்தில் விவசாயம் செய்யமுடியும்.அந்த இடத்தில் கட்டிடங்கள் உருவானால் ஏரிக்கான வரத்துக் கால்வாய்கள் துர்ந்து ஏரி முழுமையாக ஆக்கிரமிக்கப்படும். எனவே இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. மேலும் மாவட்டம் முழுவதும் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை ஆய்வு செய்து நீர்பிடிப்புப் பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


சட்டங்கள் தீர்ப்புகள் - வரி செலுத்துவோர் சங்கம்

பிப் 26 2016

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படக்கூடாது என தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறியுள்ளது.

2015ம் ஆண்டு சிவகாசியை சேர்ந்த வரி செலுத்துவோர் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளை பலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2001ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தமிழக அரசு இது தொடர்பாக ஏராளமான அரசாணைகளை பிறப்பித்துள்ளதாகவும் ஆனால் தொடர்ந்து அரசு பட்டா வழங்குவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்த போது, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பிற்கு எப்படி பட்டா வழங்கலாம் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் வெள்ளிகிழமை விளக்கமளிக்கப்பட்டது.

அதில் கடந்த 2007ம் ஆண்டு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதிலுக்குப் பிறகு, இனிமேலும் எந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கும் பட்டா வழங்கக் கூடாது என உயர் நீதிமன்ற தலமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம் எம் சுந்தரேஷ் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

நன்றி: தினமலர் 

நீர் போராட்ட கதைகள் - சின்னநாகபூண்டி

சின்னநாகபூண்டி கிராமத்தில், கழிவுநீரால் குளம் மாசுபடாமல் இருக்க, குளக்கரையில் வசிக்கும் மக்கள், தங்கள் சொந்த செலவில் குழாய்கள் அமைத்து கழிவுநீரை பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். இது, அழிந்து வரும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு மற்ற கிராமங்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணம்.ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைகளில் வசிப்பவர்கள், தங்கள் வீட்டு கழிவுநீர் மற்றும் குப்பையை, அதே நீர் நிலைகளில் வெளியேற்றுவது வழக்கமாகி விட்டது.இதனால், நீர் மாசுபடுவதுடன் அதில் வாழும் உயிரினங்களும் செத்து மடிகின்றன. குடியிருப்@பார் இடையே சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.

கோவில் குளம்:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னநாகபூண்டி கிராமம். சோளிங்கர் - சித்தூர் நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. இங்கு, ஏறத்தாழ 500 விவசாய குடும்பங்கள் உள்ளன.கிராமத்தில், நெடுஞ்சாலையை ஒட்டி, படவேட்டம்மன் கோவில் உள்ளது. கோவிலின் முன் அமைந்துள்ள குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோவில் குளம் தூர் வாரப்பட்டு சீரமைக்கப் பட்டது.குளத்தின் மேற்கு கரையில் தொடக்கப் பள்ளி, வேளாண்மை விரிவாக்க மையம், அங்கன்வாடி மையம், வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. வடக்கு கரையில் கதிரடிக்கும் களம், நூலகம் உள்ளன. கிழக்கு கரையில் வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்கள் அமைந்து உள்ளன.

குளம் மாசடையக்கூடாது:குளக்கரையில் வசிப்பவர்கள், தங்கள் வீட்டு கழிவுநீர், குளத்தில் சென்று சேரக் கூடாது என்பதிலும், குளம் மா”படக் கூடாது என்பதிலும் கவனமாக உள்ளனர்.இதற்காக, தங்கள் சொந்த செலவில், வீடுகளின் பின்புறம் பிளாஸ்டிக் குழாய்கள் அமைத்துள்ளனர். குழாய்களை பூமியில் பதித்து, ஊரின் வடக்கு பகுதியில் உள்ள போக்கு கால்வாயில் இணைத்து உள்ளனர். இதன் மூலம், கழிவுநீர் ஊருக்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது.இதனால், குளம் சுத்தமாக காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும், குளத்துநீரை அச்சமின்றி பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து, குளக்கரையில் வசிக்கும் தயாளன் கூறுகையில், ""குளத்தில் கழிவுநீரை விடக்கூடாது என்பதால், பிளாஸ்டிக் குழாய் பதித்து உள்ளோம். இதற்கு 5,000 ரூபாய் செலவு ஆனது. குளத்தில் உள்ள தாமரை செடிகள் மற்றும் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். எங்களால் நீர் மாசுபடுவதை நாங்கள் விரும்பவில்லை,'' என்றார்.

மற்ற ஊராட்சிகளிலும்இது குறித்து, சின்னநாகபூண்டி ஊராட்சிமன்ற தலைவர், வள்ளியம்மாள் கூறுகையில், ""ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு, கழிவுநீர் ஊருக்கு வெளியே கொண்டுபோய் வெளியேற்றப்படுகிறது,'' என்றார்.@மலும், ""குளக்கரை பகுதியில் உள்ள வீடுகளுக்கு மட்டும் கழிவுநீர் கொண்டு செல்வதற்கான கால்வாய் அமைக்க போதிய இடவசதி இல்லை. இதனால், அங்கு வசிப்பவர்களே தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும், கழிவுநீரை பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்,'' என்றார்.

இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு தலைவர், இளங்கோவன் கூறுகையில், ""சின்னநாகபூண்டியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத இடங்களில், பொதுமக்கள் குழாய்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்றி வருது நல்ல ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இதுபோல், மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்துவது குறித்து, அடுத்த கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து தீர்மானிக்கப்படும்'' என்றார்.

உண்மையான பசுமை வீடு:குளக்கரையில் உள்ள ஒரு வீட்டின் நடுவே, ஆலமரம் வளர்ந்து வருகிறது. இந்த மரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அதை சுற்றி வீடு கட்டப்பட்டுள்ளது. கடந்த, 30 ஆண்டுகளாக இந்த மரம் வீட்டுக்குள் வளர்ந்து வருகிறது. சிமென்ட் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட வீடு என்றாலும், இதுதான் உண்மையான பசுமை வீடாக இருக்க முடியும்!

நன்றி: தினமலர் 

Thursday 20 October 2016

நீர் போராட்டக் கதைகள் - அரியனேந்தல் நந்தகோபாலன்

ஊரெங்கும் ஊருணிகள்... நில வணிகம் முற்றிலும் ஒழிப்பு... சீமைக் கருவேலம் அழிப்பு... செழிக்கிறது விவசாயம்!

பரமக்குடியில் இருந்து ராமேசுவரம் செல்லும் நெடுஞ்சாலை நீள்கிறது. நான்கு வழிப்பாதைப் பணிகள் இன்னும் முடியவில்லை. அசுர வேகத்தில் விரைந்து கொண்டி ருக்கின்றன வாகனங்கள். ஊர்ந்து வரும் கரிய பாம்பாக வீடுகளை விழுங்கியிருக்கிறது சாலை. சாலைத் திட்டத்தால் மண்மூடிய கிணறுகளும் பாழடைந்த வீடுகளும் வாழ்ந்து கெட்டதுக்கு சாட்சியங்களாக நிற்கின்றன. இன்னொரு பக்கம், ஒரு வேட்டை விலங்குபோல விளைநிலங்களை இரையாடிக்கொண்டிருக்கிறது நில வணிகம். பயமுறுத்துகின்றன ‘பரமக்குடிக்கு வெகு அருகே’ பலகைகள்.

நகரமயமாதலின் பிரச்சினை இடம்பெயர்தல் மட்டுமல்ல; விளைநிலங்களின் அழிவுதான் அதன் பிரதானப் பிரச்சினை. உலகிலேயே விவசாய நிலங்கள் அதிகம் கொண்ட இரண்டா வது நாடு இந்தியா. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப் பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு களில் 10 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நில வணிகத்துக்கு பலியாகியிருக்கின்றன. சென்னை, ஏறக்குறைய 100 சதவீத விளை நிலங்களை இழந்துவிட்டது. திருவள்ளூர் 65.3 சதவீதம், காஞ்சிபுரம் 63.59 சதவீதம், கன்னி யாக்குமரி 82.47 சதவீதம் நகரமயமாகிவிட்டன. தற்போது தமிழகத்தில் வெறும் 58 சதவீத நிலம் மட்டுமே பாசன வசதி பெறுகின்றன. நாட்டில் ஒருகாலத்தில் 60 சதவீதமாக இருந்த விவசாயத் துறையின் வேலைவாய்ப்பு இப்போது 17 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.

இதோ வந்துவிட்டது அரியனேந்தல் கிராமப் பஞ்சாயத்து. அபூர்வ காட்சியாக இருந்தது அது. வலது பக்கம் அரியனேந்தல் முழுக்க விவசாயம் பூத்துக்கிடக்கிறது. சாலையின் எதிர்ப்புறம் விளைநிலங்கள் கூறுபோட்டு விற்கப்படுகின்றன. அங்கே கையளவு விளைநிலத்தைக்கூட காணமுடியவில்லை. எதிர்கொண்டு வரவேற்கிறார் நந்தகோபாலன். கதர் வேட்டிச் சட்டை. வாய் நிறைய சிரிப்பு. அரியனேந்தல் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர். சாலையின் இருபுறமும் காணக்கிடக்கும் வித்தியாசத்தை அவரிடம் கேட்டேன்.




நில வணிகத்துக்கு தடை!

கலகலவென சிரித்தவர், “எதிர்த்தாப்புல அது வேற பஞ்சாயத்து. இங்ஙன என் பஞ்சாயத்து. இந்த பத்து வருஷத்துல ஒருத்தரை நிலத்தை விற்க விடலை நான். சுத்துவட்டாரத்துல ரியல் எஸ்டேட் வியாபாரம் கோடிக்கணக்குல புரளுது. ஆரம்பத்தில் விவசாயிங்க, ‘‘என் நிலத்தை நான் விற்கிறேன். நீ ஏன் தடுக்குற?’’ன்னு சண்டைக்கு வந்தாங்க.

‘‘தாராளமா வித்துக்கோ. நான் பஞ்சாயத்துல அப்ரூவல் தர மாட்டேன். அப்புறம் காசு போச் சேன்னு கதறக் கூடாது’’ன்னுட்டேன். ரியல் எஸ்டேட்காரங்க முட்டி மோதிப் பார்த்தாங்க. எதுக்கும் மசியலை. அத்தனையும் நஞ்சை, புஞ்சை நிலங்கள். சட்டப்படி விளைநிலங் களுக்கு அப்ரூவல் தரக்கூடாதுங்கிறதையும் விவசாய நிலம் போச்சுன்னா விவசாயிகள் நடுத் தெருவுலதான் நிக்கணுங்கிறதையும் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி புரியவெச்சிருக்கேன். இப்ப யாரும் நிலத்தை விற்கிறேன்னுட்டு வர்ற தில்லை. எங்க ஊரோட பிரதான வாழ்வாதாரம் விவசாயம்தான். நெல்லு, பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யறோம்” என்கிறார்.

விவசாயம் சரி. தண்ணீர்? வானம் பார்த்த பூமி இது. ஆனால், அதற்கும் அருமையாக வழி செய்திருக்கிறார் நந்தகோபாலன். ஊருக்குள் நான்கு ஊருணிகளையும் ஒரு பண்ணைக் குட்டையையும் வெட்டி சாதனைப் படைத்திருக்கிறார்.

ஊருணிக் கரையில் நந்தகோபாலன்

“ஊருல நாலு முக்கியக் கோயில்கள் இருக்கு. ஒவ்வொரு கோயில் பக்கத்திலேயும் ஊருணிகள் மண் மூடிக் கிடந்துச்சு. 2006-ம் வருஷம் தலைவர் பொறுப்புக்கு வந்ததும் ஊருக்குள்ள ஊருணிகளைப் புனரமைக்க முடிவு செஞ்சேன். ஏன்னா, விவசாயம் கொஞ் சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருந்துச்சு. இந்தப் பக்கம் எல்லாம் நிலத்தடி நீர் கடுமை யான உப்புங்க. அந்தத் தண்ணியைப் பாய்ச்சி, நெலமெல்லாம் வெள்ளைப் பூத்துக்கிடக்கும். ஒருகட்டத்துல விவசாயிங்க நிலத்தை வித்துப் புட்டு ஊரை விட்டு கிளம்பலாங்கிற முடிவுக்கு வந்தாங்க.

ஊரெல்லாம் ஊருணிகள்!

ஆனா, நான் தடுத்துட்டேன். கிராம சபையைக் கூட்டி ‘‘நம்ம ஊருல விவசாயத்தைப் பொழைக்க வைக்க முடியும். அதுக்கு ஊருக்குள்ள காலம் காலமா தூர்ந்துக்கிடக்கிற ஊருணியை எல்லாம் மீட்கணும். அதை செய்யலாம். எனக்கு ரெண்டு வருஷம் அவகாசம் கொடுங்க. அப்புறமும் தண்ணீர் இல்லைன்னா உங்கள் விருப்பம்’’ன்னு சொன்னேன். மக்களும் ஏத்துக்கிட்டாங்க. முதல் வேலையா கருமலையான் கோயிலுக்குப் பின்னால இருந்த ஊருணியைக் கையில எடுத்தோம். அங்கே ஊருணி இருக்கிறதே தெரியாம மண்மூடிக் கிடந்துச்சு. உள்ளே நுழைய முடியாத அளவுக்கு சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்துக் கிடந்துச்சு. நூறு நாளு வேலை திட்டத்துல மக்களை களம் இறக்கினேன். ரெண்டொரு மாசத்துலேயே ஊருணியைத் தூர் வாரிட்டோம். கூடவே ஊருணிக்கு நடுவுல ஆழமான குளத்தை வெட்டினோம். ஊருணியை சுத்தியும் வேலி, சுற்றுச்சுவர், படித்துறை, வாயில் கதவு எல்லாத்தையும் பக்காவா முடிச்சிட்டோம். கருமலையான் கருணையில அடுத்த மாசமே அதுல தண்ணீர் நிறைஞ்சிட்டு” உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்குகிறார்.

இப்போதும் அந்த ஊருணியில் தண்ணீர் இருக்கிறது. கோடைகாலத்தில் ஓரிரு மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் பெருகியிருக்கிறது. உப்புத் தன்மையும் குறைந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஊருக்குள் இருக்கும் அழகிய மீனாள் கோயில், செட்டி அய்யனார் கோயில், நவநீத கிருஷ்ணன் கோயில், ஆயத்துறை காளியம்மன் கோயில் ஆகிய இடங்களிலும் ஊருணிகளைத் தூர் வாரி சீரமைத்திருக்கிறார் நந்தகோபாலன். தற்போது மழையில்லாமல் சுற்றுவட்டாரக் கிராமங்கள் அனைத்தும் காய்ந்துகிடக்க இங்கு மட்டும் நீர் நிறைந்து காணப்படுகின்றன ஊருணிகள். ஒவ்வோர் ஊருணி நிரம்பிய பின்பும் அடுத்த ஊருணிக்கு தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால்களையும் சிரமைத்திருக்கிறார்கள்.



“எங்க மக்களுக்குதான் நன்றி சொல்லணும். அந்தக் காலத்துல நடந்த குடி மராமத்துப் பணியை இன்னைக்கு நாங்க செய்யறோம். தூய்மை திட்டத்தின் கீழ ஊருணியில இருக்கிற குப்பைகளை அகற்றுகிறோம். நூறு நாளு திட்டத்தின் கீழே வருஷம்தோறும் தூர் வாருகிறோம். கரைகளைப் பலப்படுத்துறோம். பெரிய வேலைன்னா வீட்டுக்கு ஒருத்தர் சுழற்சி முறையில வந்துடுவாங்க. அத்தனைப் பேருக்கும் சம்பளம் கொடுக்கிறோம்” என்கிறார். இதுதவிர விவசாயத்துறையின் நிதி உதவிபெற்று பண்ணைக்குட்டை ஒன்றை புதியதாக வெட்டியிருக்கிறார் நந்தகோபாலன். அதிலும் நீர் நிரம்பியிருக்கிறது.

சீமைக் கருவேலம் அகற்றம்!

இவற்றுடன் இவர் செய்திருக்கும் மற்றொரு மகத்தான பணி, சீமைக் கருவேல மரங்கள் அகற்றம். சுற்றுவட்டாரங்கள் எங்கும் காடு போல அடர்ந்து வளர்ந்திருக்கின்றன சீமைக் கருவேலங்கள். அரசு அவற்றை அப்புறப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. ஆனால், அரியனேந்தல் கிராமத்தில் சீமைக் கருவேல மரங்களை அடியோடு பிடுங்கி எறிந்திருக்கிறார்கள் மக்கள்.

“எங்க கிராமத்துல எங்ஙன பார்த்தாலும் சீமைக் கருவேல மரங்கள் காடு மாதிரி வளர்ந்து நின்னுச்சு. கிராம சபையைக் கூட்டி தீர்மானம் போட்டோம். ஒட்டுமொத்த ஊரும் களத்துல இறங்குச்சு. ஒத்தை மரம் விடாம பிடுங்கிப்புட்டோமுங்க” என்கிறார்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் எல்லாம் மரக் கன்றுகளை நட்டிருக்கிறார்கள். இவ்வாறு சீரமைக்கப்பட்ட ஊரின் பொது இடங்களில் சுற்றிலும் வேலி போட்டு பாதுகாக்கிறார்கள். பூங்காக்கள், நடைபயிற்சிக்கான அழகிய நடைபாதைகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கு ‘டாக்டர் அப்துல் கலாம் பூங்கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஐந்தாறு ஆண்டுகளில் காடு போல வளர்த்து செழித்திருக்கின்றன மரங்கள். மரத்தடியில் அமர்ந்தோம். இலைகளை வீசி மகிழ்ச்சியாக தலையாட்டுகின்றன மரங்கள் . தாலாட்டுகிறது காற்று. மக்கள் அதிகாரத்தின் மணம் சுகந்தமாக வீசுகிறது. இதுமட்டுமா? இன்னும் இருக்கின்றன அதிசயங்கள்!

நன்றி: தி ஹிந்து தமிழ் பதிப்பு, உள்ளாட்சி தொடர் சஞ்சீவ் குமார் 

நீர் போராட்டக் கதைகள் - மைக்கேல்பட்டினம் ஜேசுமேரி

பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலை. பச்சையைப் பார்க்க முடியவில்லை. சாலையின் இருபுறமும் பொட்டல்காடு. கிட்டத்தட்ட விவசாயம் செத்துவிட்டது. உழுது கிடக்கும் நிலங்களில் உப்பு பூத்து வெளறிப்போயிருக்கின்றன. மினி பேருந்து நிற்கிறது. இறங்கும்போது “அப்படியே மேக்கால போனீங்கன்னா பத்து நிமிஷத்துல ஊர் வந்துடும்” என்கிறார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். மேற்கில் சென்றுக்கொண்டேயிருக்கிறேன். முட்காடுகள், கள்ளிச் செடிகள் என பாலைபோல நீள்கிறது பொட்டல்வெளி. கிராமத்துப் பாஷையில் பத்து நிமிடம் எனில் அரை மணி நேரம் என்று கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்போல. பிழை அவர்கள் மீது இல்லை. அவர்களின் நடை அப்படி. விறுவிறுவென நடந்துவிடுவார்கள். நகரங்களைப் போல பக்கத்து வீதிக்குச் செல்ல பைக்கை உதைப்பதில்லை. சட்டென உள்வாங்குகிறது கிராமத்து இணைப்புச் சாலை ஒன்று. நுழைந்தோம். வயல் வரப்புகள் சூழ பாலைவனச் சோலை ஒன்று வரவேற்கிறது. அது மைக்கேல்பட்டினம் கிராமப் பஞ்சாயத்து!



ஊருக்குள் நுழைகிறோம். மையமாக அவ்வளவு பெரிய ஊருணி. ஒரு பெரிய கால்பந்து மைதானம்போல விரிந்திருக்கிறது அது. நடுவே இரண்டு குளங்கள். வறட்சியால் ஊருணி நிரம்பாதபோதும் குளங்களில் தண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அருகே ஒரு தேவாலயம். வரிசையாக ஏழெட்டுத் தெருக்கள். இதென்ன ஆச்சர்யம், ஒவ்வொரு வீட்டில் இருந்து சொல்லி வைத்ததுபோல பிளாஸ்டிக் குழாய்கள் கூரையில் இருந்து கீழ் இறங்குகின்றன. இப்படி எங்கேயும் பார்த்ததில்லை. எங்கே செல்கின்றன அவை?



சேலை தலைப்பில் கையைத் துடைத்துக் கொண்டே வரவேற்கிறார் ஜேசுமேரி. மைக்கேல்பட்டினம் பஞ்சாயத் துத் தலைவர். எளிமையான தோற்றம்.

“பொறுத்துக்கிடுங்க தம்பி! சமையல் முடிக்க நேரமாயிட்டு. என்கிட்ட வண்டி எதுவும் கெடையாது. ஊருக்குள்ள எல்லாரும் வெவசாயத்துக்குப் போயிட்டாங்க. ரொம்ப தூரம் நடந்துட்டிங்களா..?” வாஞ்சையான வார்த்தைகளால் பறந்தோடியது களைப்பு.

என் கண்கள் வீடுகளில் இருந்து இறங்கும் குழாய்களை மேய்ந்துக்கொண்டிருந்தன. “என்ன தம்பி அப்பிடி பாக்குறீங்க? மழை நீர் சேகரிப்பு தொழில்நுட்பம் தம்பி. நம்ம கவர்மெண்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்ச ஊராக்கும் இது. சொல்லப்போனா வீடுகள் மூலம் மழை நீர் சேகரிச்சதுல இந்தியாவுக்கே எங்க கிராமம்தான் முன்னோடி” என்கிறார். ஆம், நினைவு வருகிறது. முதன்முதலில் அதிமுக ஆட்சியின்போது முதல்வர் ஜெயலலிதா மழை நீர் சேகரிப்பு குறித்து விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் மழை நீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிட்டிருந்தவர், ‘‘ஏன் நமது மாநிலத்திலேயே முதன்முறையாக ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவி இதனை சிறப்பாக செய்திருக்கிறார்’’ என்று பெயர் சொல்லாமல் குறிப்பிட்டார். அந்தப் பஞ்சாயத்துதான் மைக்கேல்பட்டினம்!

தெருக்களில் நடந்தோம். “ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயம். ஆனா, மக்களுக்கு செலவு வைக்கலை. கிராமப் பஞ்சாயத்து சார்பில் அஞ்சு லட்சம் ரூபாய் மதிப்பில் அத்தனை வீடுகளிலும் தகர உறை போட்டு, அதில் இருந்து மழை தண்ணீரை பிளாஸ்டிக் குழாய் மூலம் பூமிக்குள் விடுகிறோம். அது நிலத் தடிக்கு போகாது. இங்கிருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் அடியிலும் பெரிய சிமெண்ட் குழாய் புதைச்சிருக்கோம். அந்தக் குழாய்கள் எல்லாம் ஊருணியில போய் முடியுது. ஒரு மழை பெய்ஞ்சா போதும் உள்ளே இருக்குற குளங்கள்ல தண்ணீர் நெறைஞ்சிடும். என்னமோ தெரியலை, இந்த வருஷம் இன்னும் மழையில்லை. இல்லைன்னா ஊருணியே நெறைச்சிட்டுருக்கும். ஆனாலும் பிழையில்லாம வருஷம் முழுசுட்டும் குளங்கள்ல தண்ணிக் கிடக்கு. 20 வருஷத்துல எங்க கிராமத்துல மட்டும் குடி தண்ணீருக்கு பஞ்சம் வந்தது கெடையாது” என்கிறார்.

வீடுகளில் சேகரமாகும் மழை நீர் மட்டு மல்லாமல், சுற்றுவட்டாரத்தில் எங்கு மழை பெய்தாலும் அவை துளியும் வீணாகாமல் ஊரு ணிக்கு தண்ணீர் வரும் வகையில் சிறு ஓடை கள் மற்றும் கால்வாய்களை அமைத்திருக் கிறார்கள். 20 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இப்படி யோசனை வந்தது ஜேசு மேரிக்கு?



“1996-க்கு முன்னாடி ஊருக்குள்ள கடுமையான குடிநீர் பஞ்சம். 96-ல் நான் தலைவரா போட்டியின்றி தேர்வானேன். (இன்றுவரை தொடர்கிறார்) இதோ இந்த ஊருணி பூரா முள்ளுக்காடா கிடக்கும். எங்க பொம்பளையாளுங்களுக்கு ஒவ்வொரு நாளும் விடிஞ்சா பகீர்ன்னுட்டிருக்கும். குடித் தண்ணிக்கு அஞ்சாறு மைல் நடக்கணுமே. அப்படி நடந்தோமுன்னா அங்ஙன ஒரு கேணி யில சேறும் உப்புமா தண்ணி கலங்கிக் கிடக்கும். இப்பிடியா மகிண்டி, சுவாத்தன்பட்டி, முத்துராமலிங்கபுரம்பட்டி, சாம்பக்குளம்னு நெதம் ஒரு ஊரு போவோம். ஏன்னா முதல் நாளு எடுத்த கேணியில மறுநாளு தண்ணி இருக்காது. நானும் ஊர் பொம்பளைங்களோட குடத்தை தூக்கிட்டு நடப்பேன். அங்ஙனயா கூட்டம் முட்டி மோதும். நாலு ஊருப் பொம்பளையாளுங்க சேருவாங்களா. சண்டை நாறும். அப்படி கொண்டாந்த தண்ணியை தேத்தாங்கொட்டையைப் போட்டு சலிச்சோமுன்னா மதியமாகிடும். அப்புறம்தான் சோறு, தண்ணி எல்லாம்.

நாம ஊர் தலைவரா இருந்து என்ன பிரயோசனமுன்னு யோசிச்சப்பதான் இந்த ஐடியா தோணுட்டு. மழை வந்தா என்ன பண்ணுவோம்... முதல் வேலையா அண்டா, குண்டா எல்லாத்தையும் கூரைக்குக் கீழே வைப்போம். கணிசமான வீட்டுக் கூரைக்கு கீழே தகரத்தை வெட்டி கட்டியிருப்போம். அதுல சேகரமான தண்ணியைதான் குடிச்சோம். குளிச்சோம். துணி தொவைச்சோம். அதையே கொஞ்சம் மாத்தி யோசிச்சேன். அம்புட்டுதான். அப்ப தெருக்கள் அடியில மழை நீரை சேகரிக்க சிமெண்ட் குழாய் பதிக்கலை. ஒவ்வொரு தெரு முனையிலும் தொட்டியை வெச்சி தண்ணி பிடிச்சோம்.

இந்தத் திட்டத்தைப் பார்த்துட்டு சிறந்த பஞ்சாயத்துத் தலைவரா என்னை அரசாங்கம் தேர்வு செஞ்சுது. அப்போ கலெக்டரு அஞ்சு லட்சம் ரூபாய் எங்க கிராமப் பஞ்சாயத்துக்கு பரிசு கொடுத்தார். அந்தப் பணத்தை என்ன பண்ணலாம்னு யோசிப்பதான், இந்த ஊருணியைத் தூர்வார முடிவு பண்ணோம். ஆறு மாசத்துல ஊரே ஒண்ணுகூடி ஊருணியில இருந்த மொத்த சீமைக்கருவேல மரங்களையும் வேரோட பிடுங்கி எறிஞ்சோம். ஆழமா தூர் வாரினதோட நிக்காம உள்ளே ரெண்டு குளங்களையும் வெட்டினோம். சுத்துசுவர், படித்துறை எல்லாம் கட்டினோம். அப்ப தெருக்களில் எல்லாம் கான்கீரிட் சாலையை மாத்திக்கிட்டிருந்தோம். அப்படியே ஒரு யோசனை தோணுச்சு. உடனே பெரிய சிமெண்ட் குழாய்களை வாங்கியாந்து ஒவ்வொரு தெருவுக்கு நடுவுலயும் புதைச்சு எல்லாம் வீட்டு பிளாஸ்டிக் குழாய் தண்ணீரையும் அதுல போகிற மாதிரி செஞ்சிட்டோம். இப்படி ஊர் முழுக்க பத்து இடங்களில் சேகரமாகும் தண்ணி ஊருணிக்குப் போகுது” என்கிறார். ஊருணியில் தண்ணீர் நிறைந்ததால் விவசாயமும் செழித்தது. இன்றும் இங்கு ஏக்கருக்கு நூறு மூட்டை மிளகாய் சாகுபடி எடுக்கிறார்கள். நெல்லும் விளைகிறது. ஊருணி நிரம்பியது அந்தக் காலகட்டத்தில் அதிசயமாகப் பார்க்கப்பட்டது. தகவல் காட்டுத் தீ போல பரவியதால் சுற்றுவட்டாரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துப் பார்த்தார்கள். மத்திய அரசு, மாநில அரசுகளின் விருதுகள் குவிந்தன. விஷயம் வாஷிங்டனில் இருக்கும் உலக வங்கி வரைச் சென்றது. அந்த சமயம் உலகம் முழுவதும் இருந்த சிறந்த உள்ளாட்சித் தலைவர்களைத் தேர்வு செய்துகொண்டிருந்தது உலக வங்கி. உடனே அந்தக் குழுவினர் இங்கே விரைந்தார்கள். திட்டத்தைப் பற்றி கேட்டறிந்தார்கள். வாஷிங்டனுக்குத் திரும்பினார்கள். சில நாட்களிலேயே வந்தது அந்த அறிவிப்பு. உலகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 40 சிறந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் இந்தியாவுக்கான பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார் ஜேசு மேரி!



2003-ம் ஆண்டு, அன்றைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயகுமாருடன் வாஷிங்டன் பறந்தார் ஜேசுமேரி. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் உலக வங்கியின் நீர் மேலாண்மை திட்டக் குழுவினருக்கு நீர் மேலாண்மை குறித்து தமிழில் பாடம் எடுத்தார் ஜேசு மேரி. அதை மொழிபெயர்த்தார் ஆட்சியர்.

“வாஷிங்டனில் என்ன பேசினீர்கள்?” என்று கேட்டேன். “மாரித்தாயை விட உலகத் துல சுத்தமானது வேறெதுவும் கிடையாது. அதனால மழைத் தண்ணீ கூரையில விழுந்தா அதை வீணாக்காமல் குடத்துல பிடிங்க...”ன்னு பேசினேன். பெரிய ஹாஸ்யத்தை சொன்னதுபோல கலகலவென வெடித்துச் சிரிக்கிறார் ஜேசுமேரி.

மின்னல் வெட்டி மழை கொட்டத் தொடங்குகிறது. ஊருணி கரையில் இருந்த நாங்கள் எழுந்துச் செல்ல மனமின்றி நனையத் தொடங்குகிறோம்.

நன்றி: தி ஹிந்து தமிழ் -உள்ளாட்சி தொடர் டி.எல்.சஞ்சீவி குமார் 


நீர் போராட்டக் கதைகள் - நம்மால் முடியும் குழு

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஏரிகளில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவை பற்றி அந்த தொ.கா. யில் வந்த செய்தி தொகுப்புகளை இங்கே பார்ப்போம். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறாயினும், நீராதார பாதுகாப்பு அடிப்படையில் இந்த பணிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.

எல்லா தொலைகாட்சிகள் போலவும் விவாத நிகழ்ச்சிகள் வைத்து கழுத்தை அறுத்தாலும் இந்த ஒரு வேலை உருப்படியாக செய்கிறார்கள். களத்தில் எந்த அளவு பயனளித்தது என்று அந்தந்த பகுதி மக்கள் ஓரிரு வருஷங்கள் கழித்து கூறிட வேண்டும். ஒவ்வொரு குளம் தூர்வாரிய பின்னர் அதை மீண்டும் எப்படி பராமரிப்பது என்ற செயல்திட்டத்தையும் ஆலோசனைக் கூட்டத்திலேயே முடிவு செய்வது காலாகாலத்திற்கும் நல்வழி காட்டும்.

மற்ற சேனல்களில் குறைந்தபட்சம் ஏரி குளங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை அடிக்கடி காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நாகப்பட்டினம் - கீழ்வேளூர் ஓடியத்தூர் ஏரி

ஹோசூர் ராமநாயக்கன் கால்வாய். புதியதலைமுறை ம்ற்றும் ஹோசூர் மக்கள் இயக்கம்.

தருமபுரி மாவட்டம் புத்தூர் ஏரி

சென்னை பள்ளிக்கரணை-நாராயணபுரம் ஏரி

கும்பகோணம்-தேப்பெருமாநல்லூர் குளம்

திருப்பூர் வஞ்சிபாளையம் குளம்

திருச்சி வளநாடு-பெரியகுளம் 

சிவகாசி - பெரியகுளம்


சிவகாசி -புலிப்பாறைப்பட்டி காய்க்குடி ஆறு

மதுரை - கே. புளியங்குளம்

கரூர் - பெரியவளையப்பட்டி குளம்

திருவள்ளூர் ஆங்காடு கோயில் குளம் 

புதுக்கோட்டை ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி - குழித்துறை

கோவை குறிச்சி குளம் கரை

கன்னியாகுமரி நாச்சியார் குளம்


தஞ்சை செங்கிப்பட்டி - புதுக்குளம்

காஞ்சிபுரம் - கூத்திரம்பாக்கம் ஏரி

கரூர் - பவித்திரம் குளம்


கரூர் புன்னம் சத்திரம் குளம் 

தொண்டமா கவுண்டர்

மல்லசமுத்திரம் சமஸ்தானம் கொங்கதேசம் கீழ்க்கரை பூந்துறை நாட்டின் (இன்றைய திருசெங்கோட்டு பகுதி) உபநாடாகும். இப்பகுதியை ஆண்டு வந்தவர் சிற்றரசர்களான பட்டக்காரர்களில் புகழ் பெற்றவர் தொண்டைமா கவுண்டர். துணிச்சல், போராற்றல் மதிநுட்பம், தண்மையான குணம் நிறைந்தவர். பல புலவர்களை ஆதரித்து தர்மம் வளர்த்தவர். தொண்டைமான் என்பது இவர் பெற்ற விருதுப் பெயர்.

அகளங்க சோழன் என்பதும் இவர்கள் முன்னோர்களுக்கு காலங்காலமாக வழங்கப்பட்ட விருதுப்பெயராகும். நாமக்கல் கோட்டையை மீட்க சோழனுக்காக போராடி வென்றமையால் சோழ அரசன் விஜயராகவ பட்டம் கொடுத்து சிறப்பித்தார். நவாபு ஆட்சியில் பகதூர் பட்டம் பெற்றார். இவ்வளவு பட்டங்கள் அவரது திறமைகளுக்கு கிடைத்த அங்கீகாரங்களாகும்.

தென்னாட்டில் சிலகாலம் இஸ்லாமிய ஆட்சி நிலவிய காலத்தில், பேரரசுகளிடையே போர் நடந்து வந்தது. போர்க்காலத்தில் பேரரசுகளுக்கு வரிகள் செலுத்தவேண்டியதில்லை என்பதால் தொண்டைமாக்கவுண்டர் மக்களிடம் வரியை வசூலித்து கூட தன் கைப்பொருளையெல்லாம் செலவு செய்து ஏழு பெரும் ஏரிகளையும் அதற்குண்டான நீர்வழிகளையும் வாய்க்கால்களையும் வெட்டுகிறார். அனைத்தையும் ஏழே ஆண்டுகளில் முடிக்கிறார்!. மல்லை நாட்டை கிழக்கும் மேற்க்குமாக சுற்றி பாய்ந்த திருமணிமுத்தாறு மற்றும் பொன்னியாற்றின் நீரை கொண்டு தனது பூமியை வளம் கொழிக்கும் நாடாக்கினார். கொழந்கோண்டை ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, ஊமையாம்பட்டி பெரிய ஏரி, செட்டி ஏரி, கோட்டப்பாளையம் ஏரி, பருத்திப்பள்ளி ஏரி, மங்களம் ஏரி என்பவையாம்.

போர் முடிந்து நவாபு வரி கேட்க, போர்க்காலத்தில் வரி கொடுப்பதில்லை என்றும், அப்படி வசூல் செய்த வரியை செலவு செய்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். வரியை கட்டு என்ற நிர்பந்தத்திற்கு மறுக்கிறார். மன்னிப்பு கேட்டு பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக கட்டு என்ற சமரசத்திற்கும் உடன்படவில்லை. யானையை கொண்டு தலையை இடர செய்ய தண்டனை விதிக்கபடுகிறது. அவர் வெட்டிய ஏரிக்கரையிலேயே கொடூரமாக உயிரை விடுகிறார். கற்புநெறி பிறழாத அவரின் தர்மபத்தினி சின்னாத்தா யார் தடுத்தும் கேளாமல் திருமணிமுத்தாற்றின் கரையில் தொண்டைமாகவுண்டரோடு சிதையில் சேர்ந்து தீப்பாய்ந்து உயிர்விடுகிறார்.

அவர்கள் உயிர்விட்ட இடத்தில் அவர்களுக்கு எழுப்பப்பட்ட கோயில் தீப்பாஞ்சம்மன் கோயில் என்று வழிபடப்படுகிறது. செல்வதற்கு தடம் கூட இல்லாத, இக்கோயிலின் அவலக் கோலம்தான் இந்த படங்களில் நாம் பார்ப்பது. சுதை வேலைப்பாடுகளோடு அழகு மாறாமல் இருக்கின்றது. உள்ளே பாம்பு சட்டைகளும், சுற்றி குப்பைகூலமும் நிறைந்து கிடக்கின்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையன் ஒருவன், தென்னிந்த கிராமங்கள் பற்றிய தனது புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி குறிப்பிடுகையில், தான் நிற்கும் மலை தவிர சுற்றியிருக்கும் பூமியனைதும் இருக்கும் பசுமை குறித்து பூரித்து குறிப்பிடுகிறார். தன் உயிரையும், பொருளையும் கொடுத்து, இவ்வளவு வளமைக்கும் காரணமான தொண்டைமாக்கவுண்டர் நினைவிடம் இருக்கும் நிலை, திருசெங்கோட்டு மக்களின் நன்றியுணர்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஏரிகள் மட்டுமின்றி மல்லசமுத்திரம் ஸ்ரீ சோழீசர் கோயில், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில், மாமுண்டி சிதம்பரேஸ்வரர் கோயில், மங்களம் அழகுநாச்சியம்மன் கோயில் போன்ற பல கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளார். அவர் சிலை மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோயிலில் உள்ளது.

இயற்கையை கெடுக்காத நீர் சேமிப்பு/பாதுகாப்பு என்றால் ஏரி, குளங்கள் தான். நிலத்தடி நீர் செறிவூட்டல், மழைநீர் சேமிப்பு அனைத்தும் சாத்தியம். தொண்டைமாக்கவுண்டர் போன்றோர் உயிர் கொடுத்து வெட்டிய நீர்நிலைகளை காப்பாற்றாது, முள்ளும் மண்ணும் மூடவிட்டு, நிலத்திருடர்கள் பிளாட் போட்டு விற்பதை வேடிக்கை பார்த்துவிட்டு தண்ணீர் பஞ்சம் என்று சொல்வது யார் செய்த தவறு? மன்னராட்சி காலங்களில் சிறப்பாக இருந்த நீர் நிர்வாகம் மீட்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஏரி குளங்கள் சீரமைந்தால் தண்ணீர் பஞ்சம் என்பது மாயை என்பது புலனாகும். மழையாகிய மாரி கடைசியாக வந்து நிற்குமிடம் ஏரி, குளங்கள்தான். அவைதான் உண்மையான மாரியம்மன் கோயில்கள்.

-சசிகுமார்

முந்நீர் விழவு - அறிஞர் உரைகள்

நீராதாரங்கள் பற்றிய விழிப்புணர்வுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நடத்திய முந்நீர் விழவு என்ற விழாவில் பதிவு செய்யப்பட காணொளிகள்













Wednesday 19 October 2016

காவேரி காக்க துறவியர் யாத்திரை

காவிரியின் புனிதம் காக்க மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை அகில பாரத துறவியர் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கிறது. குடகு மலைச் சாரலில் காவிரியின் பிறப்பிடமான தலைக்காவேரியில் அக்டோபர் 23ம் நாள் தொடங்கிய இந்த யாத்திரை நவம்பர்-11 அன்று காவிரி கடலில் கலக்குமிடமான பூம்புகாரைச் சென்றடையும்.


அக்டோபர் 23ம் நாள் நடைபெற்ற தொடக்க விழாவில் ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் (உடுப்பி பெஜாவர் மடாதிபதி), தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் (காசி மடம், திருப்பனந்தாள்), தவத்திரு மருதாசல அடிகளார் (பேரூர் ஆதீனம்), சுவாமி கேசவானந்த மகராஜ் (ராமகிருஷ்ண மடம், கோவை) உள்ளிட்ட துறவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த யாத்திரையில் 20க்கும் மேற்பட்ட துறவியர்கள் & மடாதிபதிகள் தொடக்கம் முதல் கடைசி வரை பங்கேற்று காவிரிக் கரையில் உள்ள புனிதத் தலங்களையும் தரிசித்து வருகிறார்கள். செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே தங்கி காவிரி நதியின் புனிதத்துவத்தை உணர்த்தும் வகையில் காவேரித் தாய்க்கு பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் செய்து வருகிறார்கள். இவ்விடங்களில் காவிரியைப் பாதுக்காப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பஜனைகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஆங்காங்கே பல இந்து சமயப் பிரிவுகளயும் சார்ந்த பல்வேறு துறவியர்கள் கலந்து கொண்டு அருளாசி வழங்குகிறார்கள். இது வரையில் யாத்திரை சென்றவிடங்களில் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது.
யாத்திரை நிகழ்ச்சிகளின் போது கீழ்க்கண்ட கருத்துக்கள் பேச்சாளர்களால் வலியுறுத்திப் பேசப் படுகின்றன.
தமிழகத்தில் யாத்திரை செல்லும் வழி மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள்:
நவம்பர்-2 (புதன்): ஒகேனக்கல்
நவம்பர்-3 (வியாழன்): மேட்டூர்
நவம்பர்-4 (வெள்ளி): பவானி
நவம்பர்-5 (சனி): கரூர்
நவம்பர்-6 (ஞாயிறு): திருஈங்கோய்மலை
நவம்பர்-7 (திங்கள்): முசிறி, ஸ்ரீரங்கம்
நவம்பர்-8 (செவ்வாய்): திருவையாறு
நவம்பர்-9 (புதன்): கும்பகோணம்
நவம்பர்-10 (வியாழன்): மயிலாடுதுறை
நவம்பர்-11 (வெள்ளி): பூம்புகார்
இவ்விடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தவத்திரு காசிவாசி. முத்துக்குமாரசுவாமி தம்பிரான் (திருப்பனந்தாள்), சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் (திருவாவடுதுறை), ஸ்ரீமத் சுவாமி திவ்யானந்த மகாராஜ் (ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை), பூஜ்ய சுவாமி ஓங்காரானந்தா (சித்பவானந்த ஆசிரமம், தேனி), பூஜ்ய ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் (தன்வந்தரி ஆரோக்கிய பீடம், வாலாஜாபேட்டை), ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்தா, சுவாமி ராமகிருஷ்ணானந்தா, (ராமகிருஷ்ண மடம்), சுவாமி சைதன்யானந்தா (விவேகானந்த ஆசிரமம், வெள்ளிமலை), மாதாஜி ஸ்ரீவித்யாம்பா சரஸ்வதி உள்ளிட்ட பல துறவியர் கலந்து கொள்கின்றனர். பாரதீய கிஸான் சங்கம் என்ற அகில பாரத விவசாயிகள் அமைப்பின் தலைவர்களும், செயலாளர்களும் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றனர்.
நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் கீழே காணலாம்.
மாசு படிந்திருக்கும் காவேரியைத் தூய்மை செய்து அதன் புனிதத் துவத்தை மீட்பது என்பது சாதாரண பணியல்ல. மத்திய, மாநில அரசுகள், காவிரி செல்லும் வழியிலுள்ள நகராட்சி ஊராட்சி அமைப்புக்கள், சூழலியல் அமைப்புகள், நதிநீர்த் துறை நிபுணர்கள், விவசாயப் பெருமக்கள், தொழில் அமைப்புகள், திருக்கோயில்கள், மடங்கள், இந்து சமய ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பன்முக ஒத்துழைப்புடன் செய்ய வேண்டிய மாபெரும் பணி இது. துறவியரின் இந்த யாத்திரை அத்தகைய பணிக்கான தேவை பற்றிய விழிப்புணர்வை சம்பந்தப் பட்ட அனைத்துத் துறையினரிடமும் கட்டாயம் உருவாக்கும் என்று நம்புவோம்.














நன்றி: www.tamilhindu.com

விவசாய நிலத்தில் நீர் மேம்பாட்டு வழிமுறைகள்
















நீர் போராட்டக் கதைகள் - சிவகங்கை முருகேசன்


நீர் போராட்டக் கதைகள் - உத்தவ் கேடேகர் ஷிவ்னி



நீர் போராட்டக் கதைகள் - அன்னா ஹசாரே ராலேகான் சித்தி




நீர் போராட்டக் கதைகள் - அனுபம் மிஸ்ரா

வானில் இருந்து வரும் ஒரு சொட்டு நீரையும் மனிதனுக்குப் பயன்படாது கடலில் சேர விட மாட்டேன் என்ற இலங்கை மன்னனின் கூற்றை இன்றைய நவீன இந்தியாவி உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் சூழலியல் செயற்பாட்டாளர் அனுபம் மிஷ்ரா.

இவர் 1948 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் காந்தியவாதியாகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், நீர் மேலாண்மையாளராகவும் அறியப்பட்டார். இவர் 1996 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் விருதைப் பெற்றார். நீர் மேலாண்மை தொடர்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராமங்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

காந்தி சமாதான நிறுவனத்தின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவர். நவீன இந்தியாவின் சூழலோடு போராடும் தண்ணீர் மனிதன். வழக்கிழந்து போய்க் கொண்டிருக்கும் புராதன மழை நீர் சேகரிப்பு முறைமைகளை ஆய்வு செய்து வருபவர்.



இந்தியாவின் பாலை வனங்களில் அக்கால மக்கள் எவ்வாறு தமது விவசாய நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக மிக எளிமையான அழகியலுடன் கூடிய கட்டிட முறைமைகளைக் கையாண்டார்கள் என்பது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியா முழுதும் அவர்மேற் கொண்ட பயணங்கள் மூலம் மழை நீரைப் பயன்படுத்தியே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பதனை மிக வலுவாக நம்புகிறார்.அவரது பயணங்களின் மூலமாக அவர் சந்தித்த மக்களுடான உரையாடல்களின் மூலமாக நவீன இந்தியாவில் இது மிக சாத்தியமானது என்பதனை நிரூபிக்கிறார்.

நவீன நீர் முகாமைத்துவத் தொழிற் நுட்ப முறைமைக்கும் புராதன இந்தியாவின் நீர் முறைமைக்கும் இடையே பாலமாகத் தொழிற்படுகிறார்.

Contact Details: 
Gandhi Peace Foundation
221 - 223, Deendayal Upadhyaya Marg
New Delhi 110 002
Tel: 23237491, 23237493










நீர் போராட்டக் கதைகள் - தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரி






தொடர்புக்கு: பாலசுப்ரமணி தர்மலிங்கம்
https://www.facebook.com/balasubramani.dharmalingam.3

தர்மபுரி மக்கள் மன்றம்:
72994 28570
99940 49612

நீர் போராட்டக் கதைகள் - மழைநீர் வடிப்பு சிவகுமார்

சில ஆயிரம் செலவில், லட்சம் லிட்டர் தண்ணீர்

உலகுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே நெருக்கடியாக இருக்கக்கூடிய இயற்கை வளம் தண்ணீர். குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது நமக்குத் தெரியும். கோடையில் தென்னையைக் காப்பாற்ற தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாசனம் செய்யும் உழவர்கள் நம்மூரில் இருப்பது அதைவிடக் கொடுமை. இப்படி நீரின் தேவையும் அழுத்தமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

அனைத்துப் பொருட்களை விடவும் நீர் விலைமதிப்பற்றது. ஏனென்றால், நீரை விளைவிக்க முடியாது. அதனால்தான் நமது முன்னோர் `நீரின்றி அமையாது உலகு’ என்று கூறிவைத்தார்கள். அளவற்ற அன்பை செலுத்துவதுபோல, தனது பிள்ளைகளாகிய உயிரினங்களுக்கு நீரை இயற்கை அள்ளிக் கொடுத்துள்ளது. உலகில் மனித குலம் மட்டுமே, தண்ணீரை மாசுபடுத்தி அழிக்கும் பணியைச் செய்கிறது. குறிப்பாக, பேராசை பிடித்தாட்டும் மனிதர்களால்தான் அது நடக்கிறது. காட்டில் வாழும் பழங்குடிகளும், கடலருகே மீன் பிடித்து வாழும் மீனவர்களும், ஏழை உழவர்களும் இந்தக் கொடுமையைச் செய்வதில்லை.

குறைந்த செலவு

இந்தப் பின்னணியில் மழையால் கிடைக்கும் நீரை, முறையாகச் சேமித்தாலே நமது தேவையில் பெரும் பகுதியை நிறைவு செய்துகொள்ளலாம். அந்த முயற்சியில் மிகக் குறைந்த செலவில், மழைநீர் அறுவடை செய்யும் பணியை செய்து வருகிறார் உடுமலைப்பேட்டை சிவக்குமார்.

தன்னுடைய பண்ணையில் இவர் இதைச் செய்துள்ளதோடு மற்ற உழவர்களுக்கும் இந்த ஏற்பாட்டை செய்து கொடுத்து வருகிறார். இவர் ஓர் இயற்கை வழி உழவர்.

இவருடைய ஒருங்கிணைந்த பண்ணையில் தென்னை, பட்டுப்புழு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகியவற்றுடன் காய்கறிச் சாகுபடியும் நடக்கிறது. இவரது கோழி வளர்ப்பு மாதிரியும் அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமே. மிகக் குறைந்த செலவில் கோழி வளர்க்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளார்.

நீர் சேமிப்பைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் செலவில், நீர் சேமிப்பு அமைப்பை இவர் உருவாக்கிவிடுகிறார். இந்த முறையின் அடிப்படை அம்சம் ஆழ்துளைக் கிணறுகளிலும், சாதாரண திறந்தவெளிக் கிணறுகளிலும் நேரடியாக நீரைச் செலுத்துவதுதான்.

எப்படிச் செய்வது?
மழைக் காலத்தில் நம் வயலுக்கு அருகில் உள்ள ஓடை அல்லது குளங்களில் தண்ணீர் வந்து சேரும். அப்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் அங்கு நிற்காமல், பயன்படாமல் வெளியேறிவிடும். அந்த நீரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இவருடைய கோட்பாடு. அந்த அடிப்படையில் ஒரு குளத்தில் இருந்தோ, ஓடையில் இருந்தோ அல்லது புதிதாக ஒரு பண்ணைக் குட்டையை அமைத்தோ, நீர் வந்து சேரும் இடத்தை இவர் தேர்வு செய்கிறார். அந்த இடத்திலிருந்து ஏறத்தாழ ஐந்து அடி ஆழத்துக்கு வாய்க்கால் அமைக்கிறார். அந்த வாய்க்கால் ஆழ்துளைக் கிணற்றை நோக்கி அமைக்கப்படுகிறது.

அதன் பின்னர் வாய்க்கால் வரும் வழியில் வடிகட்டும் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. இது மிகவும் இன்றியமையாத ஒரு செயல்பாடு. இதற்கும் செலவு குறைவான முறையையே இவர் கையாளுகிறார். இந்த வடிகட்டும் அமைப்பைப் பலரும் மிக அதிக செலவு செய்து உருவாக்குகின்றனர், அது தேவையற்றது.



வடிகட்டும் அமைப்பை உருவாக்க பிளாஸ்டிக் பீப்பாய் பயன்படுத்தப்படுகிறது. இருநூறு லிட்டர் கொள்ளளவு உள்ள பீப்பாய் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது, அது போதும். இந்தக் கலனில் ஆறு மில்லி மீட்டர் அளவுகொண்ட, நெருக்கமான துளைகள் இடப்படுகின்றன. அதன் பின்னர் அந்தப் பீப்பாயின் நடுவில் ஆறு விரற்கடை (இஞ்ச்) விட்டமுள்ள பி.வி.சி. குழாய் பொருத்தப்படுகிறது. அந்தக் குழாயில் மிகக் சிறிய துளைகள் இடப்படும்.

நடுவில் பொருத்தப்படும் குழாயைச் சுற்றி, ஒரு சல்லடைத் துணி நன்கு கட்டப்படுகிறது. அதேபோல பீப்பாயின் உட்பகுதியில், அதாவது, சுவற்றுப் பகுதியிலும் சல்லடைத் துணி பொருத்தப்படுகிறது. இதன் இடைவெளியில் கசடு, கழிவு அகற்றப்பட்ட குறுமணல் நிரப்பப்படுகிறது. இது மணல் வடிகட்டியாகச் செயல்படும்.

இந்த அமைப்பை ஒழுங்கு செய்த பின்னர், குளத்திலிருந்து ஐந்தடி ஆழத்தில் உள்ள வாய்க்கால் வழியாகக் கொண்டுவரப்படும் பி.வி.சி. குழாயுடன் இணைக்கப்படும். இப்படியாகக் குளத்திலிருந்து நேரடியாக வடிகட்டும் அமைப்புக்கு நீர் வந்துவிடுகிறது.

புவியீர்ப்பு விசை
இதன் பின்னர் வடிகட்டியில் இருந்து நீர், கிணற்றுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்காக பீப்பாயின் நடுவில் உள்ள குழாயுடன் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதாவது, மணல் வடிகட்டியில் நீர் தூய்மைப்படுத்தப்பட்டு, குழாய் வழியாக இறங்கி, கிணற்றுக்கு வந்து சேர்கிறது. இதனால் எந்தவித கசடும், மண்ணும் தண்ணீரில் கலந்திருப்பதில்லை. இந்த வடிகட்டி அமைப்பு பல ஆண்டுகளுக்கு வேலை செய்கிறது. இந்த முறையில் எந்த வகையிலும் மின்சாரமோ, ஆற்றலோ தேவையில்லை. நீரை ஏற்றவோ, தள்ள வேண்டிய தேவையோ கிடையாது. முற்றிலும் புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர்
இந்த அமைப்பின் மூலம் முதல் பருவ மழையிலேயே ஆழ்துளைக் கிணறுகள் போதிய அளவு நீரைப் பெற்றுவிடுகின்றன. அதுமட்டுமல்ல, நீர் வறண்டு உயிர்விட்ட கிணறுகள்கூட, இந்த அமைப்பு மூலம் உயிர்ப்பிக்கப்பட்டு நீர் மட்டம் உயர்கிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட கிணறுகளுக்கு அருகிலுள்ள மற்ற கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்கிறது. இப்படியாக மிகக் குறைந்த செலவில் ஓராண்டிலேயே சில லட்சம் லிட்டர் நீரைப் பெறும் உத்தியை, இவர் உருவாக்கி இருக்கிறார். தேவைப்படுபவர்களுக்கு இந்த ஏற்பாட்டை அவர் செய்தும் கொடுக்கிறார்.

விவசாயி சிவக்குமார் தொடர்புக்கு: 7598378583