Sunday 23 October 2016

சட்டங்களும் தீர்ப்புகளும்-தாம்பரம் 5 ஏரிகள்

 தாம்பரம் தாலுகாவில் 5 ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு மற்றும் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவதாக தேர்தலின் போது அமைச்சர் சின்னையா வாக்குறுதி அளித்தார். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவ மழை கொட்டி தீர்த்தபோது, தாம்பரம் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சில ஏரி உடைந்ததாலும், உபரிநீர் வெளியேறியதாலும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் கடுமையான துன்பத்துக்கு ஆளானார்கள். பெரும்பாலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள்தான் இதுபோன்ற பாதிப்புக்கு காரணம் என அனைவரும் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து தாம்பரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏரிகள், தாங்கல், குளம், குட்டை உள்ளிட்ட பகுதிகளில் எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தாம்பரம் வருவாய் துறை சார்பில் அறிக்கை தயாரித்து, மாவட்ட கலெக்டருக்கு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கீடு மற்றும் அளவீடு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தாம்பரம் நகராட்சி எல்லையில் உள்ள சேலையூர், இரும்புலியூர், தாம்பரம், கடப்பேரி, புலிக்கொரடு ஆகிய 5 பெரிய ஏரிக்கரைகளின் நீளம், அகலம் எவ்வளவு, அவைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் எவ்வளவு என கணக்கெடுக்கப்பட்டது.



மேலும் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறும் வழி, கலங்கல் பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதா, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளவை கல் வீடுகளா, குடிசைகளா, கடைகளா, வணிக வளாகங்களா என்ற ரீதியிலும் இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போது, அமைச்சர் சின்னையா, ‘‘ஏரி பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்’’ என உறுதியளித்தார். 

அவர் வெற்றி பெற்று அமைச்சரான பிறகு அதை செய்யவில்லை. ‘‘உள்ளாட்சியில் திமுகவினரே அதிகளவில் உள்ளனர். அதனால் நாம், எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வையுங்கள்’’ என்று உள்ளாட்சி மன்ற தேர்தலின்போது அமைச்சர் சின்னையா, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதை நம்பி உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் அதிமுகவை பொதுமக்கள் வெற்றி பெற வைத்தனர். அதற்கு பிறகும் ஏரி பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.



இந்நிலையில், தற்போது ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கணக்கீடு மற்றும் அளவீடு பணி நடப்பதால் இங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். அதே நேரத்தில், ஆளுங்கட்சி மீதும் குறிப்பாக அமைச்சர் சின்னையா மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வார்டுகளான ஏரி பகுதிகள்

தாம்பரம் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. அவற்றில் கடப்பேரி ஏரியில் 1, 2, 4, 5, 6, 7, 8 இரும்புலியூர் ஏரியில் 25, 26,27, சேலையூர் ஏரியில் 22, 23, தாம்பரம் ஏரியில் 28, 29, 30, 34 ஆகிய வார்டுகள் உள்ளன. சில வார்டுகள் பாதி அளவு ஏரியின் வெளிப்புறம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். மாடி, குடிசை, கடைகள், வணிக வளாகங்கள் என பல்வேறு கட்டிங்கள் இந்த ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

நன்றி: தினகரன்

ஏரிகள் ஆக்கிரமித்தால் அமைச்சர் வாக்குறுதி கூட செல்லாது

சேலையூர் ஏரியில் ஆக்கிரமிப்பாளர்கள் 1400 பேருக்கு நோட்டிஸ் அனுப்பட்டது. 

No comments:

Post a Comment