Sunday 23 October 2016

சட்டங்கள் தீர்ப்புகள் - ஒழலூர் ஏரி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் போராட்டத்தினால் ஒழலூர் ஏரியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீட்டுமனைப் பிரிவுகள் அகற்றப் பட்டன.மாற்றப்பட்ட பகுதி தற்போது மாவட்ட நிர்வாகத்தால் நீர்பிடிப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த ஒழலூர் கிராமத்தில் 196 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி புதுப்பாக்கம், ஒழலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இந்த ஏரியை, நீர்வள நிலவளத் திட்டத்தில் சீரமைக்க மாவட்டநிர்வாகம் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் பரிந்துரைக்கு அனுப்பிவைத்திருந்தது.



இந்நிலையில் இந்த ஏரியின் நீர் பிடிப்புப் பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கும் மேல் நிலத்தை ஒருசிலர் முறைகேடாக பட்டா பெற்று வைத்திருந்தனர்.கரடு முரடான பகுதியை இயந்திரங்களை வைத்து சமன் செய்து கல்நட்டு வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இதற்கு சில அரசு அதிகாரிகளும் துணை போனார்கள். இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சிறப்பு அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழுவை அனுப்பி ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து, ஏரியில் போடப்பட்டுள்ள வீட்டுமனைகளை காலி செய்து, ஏரியைப் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஏரியில் பட்டா இல்லாத இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது. இருந்த போதிலும் ஏரியில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீட்டுமனைகளையும் அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஏரியை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்தனர். அதனடிப்ப டையில் மாவட்ட வருவாய் அலுவலர் சௌரிராஜன் பிறப்பித்துள்ள அரசு ஆணையில் ஒழலூர் புதுப்பாக்கம் ஏரியில் முழுமையாக அளவீடு செய்து தணிக்கை செய்யப்பட்டபோது அதில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என்றும் மேற்படி ஏரியை ஒட்டியுள்ள பட்டாநிலங்களில் நீர் நிரம்பும்போது நீரால் சூழப்பட்டு காணப்படும் என்றும் மேற்படி பட்டா நிலங்கள் யுடிஆர் திட்டத்திற்கு முந்தைய பதிவுகளில், ஏரிநீர் முழுக்கடை, என பதிவு செய்யப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் மேற்கண்ட நிலங்களை நீர் முழுக்கடை (நீர்பிடிப்பு) பகுதியாக பதிவு செய்ய வேண்டும் என்று நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விவசாயிகள் சங்கம் வரவேற்பு

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேருவிடம் கேட்டபோது ஏரியில் வீட்டுமனைகளாக மாற்ற முயன்ற இடத்தை நீர்பிடிப்பு பகுதியாக ஆவணங்களில் பதிவு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நீர்பிடிப்பு பகுதியில் பட்டா வைத்துள்ளவர்கள் நீர்பிடிப்பு இல்லாத நேரத்தில் விவசாயம் செய்யமுடியும்.அந்த இடத்தில் கட்டிடங்கள் உருவானால் ஏரிக்கான வரத்துக் கால்வாய்கள் துர்ந்து ஏரி முழுமையாக ஆக்கிரமிக்கப்படும். எனவே இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. மேலும் மாவட்டம் முழுவதும் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை ஆய்வு செய்து நீர்பிடிப்புப் பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


No comments:

Post a Comment