Sunday 23 October 2016

நீர் போராட்ட கதைகள்-கருப்பூர் தாய் ஏரி மீட்பு

சேலம் மாவட்டம், கருப்பூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட, கருப்பூர் பனங்காடு ஏரி, 30க்கும் மேற்பட்ட, கிராமங்களின் நீராதாரமாக, அப்போது விளங்கியது. சேலம், ஏற்காடு மலையில் இருந்து வரும் நீரானது, மேக்னசைட் பகுதிகளின் வழியாக, கருப்பூர் பனங்காடு ஏரிக்கு வந்து சேர்ந்தது.

கருப்பூர், மீர் சமுத்திரம் ஏரி, குள்ளக்கவுண்டனூரில் உள்ள சமுத்திரம் ஏரி, மாங்குப்பை ஏரி, செல்லபிள்ளை குட்டை, முத்துநாயக்கன் பட்டி ஏரி, பழையூர் ஏரி உள்ளிட்ட, சுமார் 30க்கும் மேற்பட்ட கிளை ஏரிகளின், பிறப்பிடமாக விளங்குவதால், கருப்பூர், பனங்காடு ஏரியை, அப்பகுதி மக்கள், "தாய் ஏரி' என்று அழைக்கின்றனர்.இது, 30க்கும் மேற்பட்ட ஏரிகளின் வழியாகச் சென்று, பல்வேறு கிராமங்களின் நீராதாரமாக விளங்கி, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்பட்டு கடைசியில், பூலாம்பட்டி ஏரியில் கலந்து, காவிரி ஆற்றில் கலக்கும். அந்த காலத்தில், சேலத்தின் குடிநீர் தேவையை தீர்க்க, பனங்காடு ஏரியில் உள்ள தண்ணீரை, சேலத்திற்கு கொண்டு வர, திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், கருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மேக்னசைட் வெட்டி எடுக்க தொடங்கினர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொடங்கி, இன்று வரை, ஏறக்குறைய, 70 ஆண்டுகளுக்கும் மேலாக, மேக்னசைட் எடுக்கப்பட்டு வருகிறது. மேக்னசைட் நிறுவனம், இப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், ஏற்காட்டில் இருந்து வரும் நீர் வழிகளையும் சிதைத்தது.இதன் விளைவாக, ஏற்காட்டில் இருந்து வரும் நீர் சிறிது, சிறிதாக குறைந்து, கடந்த, 32 ஆண்டுகளுக்கு முன், தாய் ஏரிக்கு நீர் வருவது நின்று போனது. இதன் எதிரொலியாக, தாய் ஏரியின் கிளை ஏரிகளும் முழுமையாக வறண்டு விட்டது. நீர் வழிப்பாதையை சரி செய்து, ஏரியை சீரமைக்க, கருப்பூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து, பல்வேறு போராட்டம் நடத்தியும், எவ்வித பலனும் இல்லை.

இன்று இப்பகுதி, 1,000 அடிக்கு மேலே, ஆழ்துளை கிணற்றில், "போர்' போட்டாலும், நீர் இல்லை என்ற நிலைக்கு மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த, 2008ல், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை கொண்டு, "கருப்பூர் ஏரி பாதுகாப்பு இயக்கம்' உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பின் மூலம், ஆர்.டி.ஓ., தாசில்தார், கலெக்டர் ஆகியோருக்கு தொடர்ச்சியாக மனு அனுப்பபட்டது. அவர்களும் வந்து பார்வையிட்டு, சரி செய்து கொடுப்பதாக, வாக்குறுதி கொடுத்துச் சென்றுள்ளனர்.ஏரி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், பல்வேறு உண்மைகளையும், மேக்னசைட் பகுதியில் சட்ட விரோதமாக, ஆக்கிரமிப்பு செய்து அழிக்கப்பட்டிருப்பதையும், வெளிக்கொணர்ந்தனர். இதன் பின்னர், செயில் நிறுவனம், தன் தவறுகளை திருத்திக் கொள்ள, முன் வந்தது. அதன்படி, ஏரியை சீரமைக்க, செயில் நிறுவனம் தன்னுடைய இயந்திரங்களை, இலவசமாக கொடுத்தது.

கருப்பூர் விவசாயிகளும் செலவை ஏற்றுக்கொள்ள, கருப்பூர் ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் அழிந்து போன, நீர் வழிகளை கண்டுபிடித்தனர். அதன் பிறகு, இந்தியாவிலேயே முதன் முறையாக, கனிம பகுதியில், நீரோடை சீரமைக்கும் பணி தொடங்கியது. கடந்த, ஆறு மாதங்களாக, கருப்பூர் ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் கடுமையாக உழைத்தனர்.இந்த கடின உழைப்பின் பலனாக, கடந்த சில நாட்களாக, தொடர்ந்து பெய்த கோடை மழையால், தற்போது, செயில் நிறுவன, எல்லை முடிவில் உள்ள தடுப்பணை, முழுமையாக நிரம்பி, கருப்பூர் தாய் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இது திட்டமிட்ட வேலையில், வெறும், 25 சதவீதம் மட்டுமே, முடிவடைந்த நிலையில், தற்போது நீர் வந்தள்ளது.இந்த நீரோடை, ஏற்காடு அடிவாரத்தில் உள்ள, சிறு குறு நீரோடைகளுடன் இணைக்கப்படுதல், அழிந்த ஓடைகளை திரும்ப உருவாக்குதல் போன்ற, 75 சதவீதம் பணி மீதம் இருக்கிறது. இந்தப்பணி முழுமையாக முடிவடைந்தால், தாய் ஏரி, தன் அனைத்து பிள்ளைகளுக்கும், நீர் வழங்குவதோடு, காவிரிக்கும் நீர் தருவாள் என்பதில் ஐயமில்லை.

ஏரி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், விஜயராகவன் உள்ளிட்ட, 15 உறுப்பினர்கள் கூறியதாவது:ஏரி பாதுகாப்பு இயக்கம் மற்றும் சேலம் மக்கள் குழு, விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து இப்பணிகளை மேற்கொண்டோம். மீதமுள்ள, 75 சதவீதம் பணி தொடந்து செய்ய, செயில், டான்மேக், டால்மியா ஆகிய அனைத்து நிறுவனங்களும், தங்கள் பகுதியில் உள்ள விதிகளை மீறி அழிக்கப்பட்ட ஓடைகளை சரி செய்ய வேண்டும். மேலும், இது போன்று உள்ள கிராமங்களில் பொதுமக்களாகவே, களத்தில் இறங்கி, ஏரிகளை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.

400 ஏக்கர் பாசன வசதி : சேலம், கருப்பூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள, "தாய் ஏரி' 58 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கிருந்து செல்லும் நீர், 30க்கும் மேற்பட்ட கிளை ஏரிகளின் வழியாக சென்று, பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. தாய் ஏரி மூலம், கருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 30 கி. மீட்டர் தொலைவில், 400 ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. செயில் நிறுவன எல்லையில் உள்ள, 6 அடி உயரம் தடுப்பணை மூலம் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம், அங்குள்ள விவசாய பகுதிகளுக்கு, மழை இல்லாத காலங்களிலும், பாசன வசதி கிடைக்கிறது.

நன்றி: தமிழ்மித்ரன்

No comments:

Post a Comment