Monday 17 October 2016

நீர் போராட்டக் கதைகள்-ஐயப்ப மசாகி

ஐயப்ப மசாகி. 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது என்று இவருடைய சாதனைப் பட்டியல் நீள்கிறது.

இந்தச் சாதனைகள் தேசிய அளவிலான சாதனைத் தொகுப்பான லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன. வறண்ட கிணறுகளையும், ஆழ்குழாய் கிணறுகளையும், நீராதாரங்களையும் உயிர்ப்பிக்கும் எளிய தொழில்நுட்பத்துக்குச் சொந்தக்காரரான இவர் 'வாட்டர் காந்தி' என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.

அகலாத நினைவு
கர்நாடகாவில், தான் பிறந்த ஊரான கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிய ஒரு சூழலில், அவர் பிறந்தார். அந்நாளில் தினமும்​ அதிகாலை 3 மணிக்கு ​எழுந்து, பல கிலோமீட்டர் தொலைவு சென்று தண்ணீர் எடுக்கச் சென்ற அவருடைய குழந்தைப் பருவமே, அவரை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. மண்ணெண்ணெய் வாங்கக் கூட வசதி இல்லாத பெற்றோர், பல கஷ்டங்களுக்கு இடையிலும் இவரை படிக்க வைத்தனர். படித்து வேலைக்குச் சென்ற மசாகிக்கு, வழக்கமான  வேலையில் நாட்டம் இல்லை. காரணம் அவர் சிறுவயதில் சந்தித்த குடிநீர் பிரச்னை. 

சில நாட்களில் ஊர் திரும்பிய அவர், 6 ஏக்கர் பரப்பளவில் வறண்ட ஒரு நிலப்பகுதியை வாங்கினார். அங்கு காபியும்,​ ரப்பரும் வளர்த்தார்.  கனமழை,​ பிறகு 2 வருடங்கள் வறட்சி என மாறி மாறி வந்ததில் பயிர்கள் அழிந்தன. அப்போதுதான் இவருக்கு ஒன்று புரிந்தது. 'குளிரிலும், வெள்ளத்திலும் மக்கள் வீட்டினுள் தூங்கி முடங்கிவிடுகின்றனர். சுளீரென வெயில் அடித்து வறட்சி ஏற்படும்போதுதான்​, அய்யய்யோ என்ன இது இப்படி வெயில் கொளுத்துகிறது' என கொதித்து ​எழுகின்றனர்.

இதற்கெல்லாம் தீர்வு காண முடிவெடுத்தார் மசாகி. இடையே அண்ணா ஹசாரே, ராஜேந்திர சிங் போன்றோரை சந்தித்து விவாதித்தார். போர்வெல்களில் அதிக நீரை சேமிப்பதன் மூலமும், பாசனத்திற்கு குறைந்த அளவு நீரை உபயோகிப்பதன் மூலமும் நீரை அதிகளவு சேமிக்கலாம்​ என்பதை அறிந்தார்.​

அடுத்தடுத்த வருடங்களில், அது வெற்றியை கொடுத்தது. இம்முறையைப் பயன்படுத்தி அவர் அதிக அறுவடை செய்தார். பிறகு, பக்கத்து வயல்களிலும் இம்முறையைப் பரிசோதித்து வெற்றி பெற்றார். அவருடைய வேலையை உதறிவிட்டு இப்பணியிலேயே தன்னை​ ஈடுபடுத்திக்கொண்டார். 

நிலத்தில் ஒரு குழி தோண்டி அதில் மணல், களிமண், கூழாங்கற்கள், பாராங்கற்கள் ஆகியவற்றை போட்டார். மழை நீர் உள்ளே சென்றால் கற்களையும்,​ மணலையும் தாண்டிச் சென்று அடிமண்ணை நனைக்கும். ஒரு saturation புள்ளிக்கு வந்த பிறகு, நிலத்தில் இருந்து நீர் ஊற்று போல் பெருக்கெடுக்கும்.​ மேலும் ஒவ்வொரு நிலத்தின் அமைப்புக்கும், அந்த வட்டார நீர்வளம், மழைவளம் பொருத்தும், நிலத்தில் தடுப்புகள், குட்டைகள், நீர் சேகரம்-சேமிப்பு, நிலத்தடி செறிவூட்டும் அமைப்புகள் போன்ற ஆலோசனைகளை வழங்குகிறார். இதுவே இவரது அவரது நீர் சேகரிப்பு முறை திட்டம். இவருடைய வழிகாட்டுதலில், பலரும் ​நீர் சேமிப்பு பணியிலும் விழிப்பு உணர்வு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தண்ணீரின்றி வறண்ட பகுதிகளை இவர் வளப்படுத்தியிருக்கிறார். நீர்நிலைகளை உயிர்ப்பிக்கும் திட்டங்களில் ஓராண்டுக்குள் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார். மழைநீரைச் சேகரித்து வளம்பெறும் வழிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கல்வி அளிக்கும் மகத்தான பணியையும் இவர் செய்துவருகிறார்.

300 ஆண்டுகளில் காலி
தமிழகத் தண்ணீர் தன்னிறைவுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கத் திருநெல்வேலிக்கு வந்திருந்த அவருடன் பேசியபோது, தன்னுடைய மாணவப் பருவத்தில் தண்ணீருக்காகத் தனது குடும்பம் பட்ட வேதனைகளில் இருந்து, தற்போது தண்ணீருக்காகத் தான் மேற்கொண்டிருக்கும் தவம் குறித்து விளக்கினார்:

360 கோடி ஆண்டுகளாக நிலத்தில் சேகரிக்கப்பட்ட தண்ணீரை, வெறும் 300 ஆண்டுகளில் மனிதர்கள் தீர்த்துவிட்டார்கள். மழை நிச்சயமில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால், நீராதாரங்களை உயிர்ப்பித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தண்ணீருக்காகக் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் மக்கள் படும் பாட்டை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி வருகிறேன். எனது தொழில்நுட்பத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்திருக்கிறேன்.

இருப்பதைச் சேமிப்போம்
குடிநீர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மேலும் மேலும் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க வேண்டியதில்லை. ஏற்கெனவே, பயனற்று இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உயிர்ப் பித்துப் பெருமளவு தண்ணீரைப் பெறமுடியும். இதுபோல் வறண் டிருக்கும் ஏரிகளையும் உயிர்ப்பித்து விவசாயத்தைச் செழிக்க வைக்கலாம்.

சாக்கடை கழிவு நீரை அப்படியே நிலத்தில் 20 அடிக்குக் கீழே கொண்டு சென்றுவிட்டால் போதும். மண் அடுக்குகளே அதைச் சுத்திகரித்துவிடும்.

இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாகப் பெய்யும் மழையின் அளவு குறையவில்லை. ஆனால், மழை பெய்யும் காலமும், இடமும் மாறியிருக்கின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக அளவு மழையும், சில பகுதிகளில் அறவே மழையில்லாமலும் இருக்கும் நிலை தற்போது உள்ளது.

இதனால் கிடைக்கும் மழையை நிலத்தடியில் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக அதிகச் செலவில்லாத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வறண்டிருக்கும் நீராதாரங்களை உயிர்ப்பித்துவருகிறேன்.

புதிய முறை
கழிவு நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்கள், பள்ளிகள், தனியார் அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வேளாண் பண்ணைகளில் ஒரே பருவத்தில் நிலத்தடி நீரை மிக விரைவாக உயர்த்தும் வகையிலான தொழில்நுட்பங்கள் என்று பல்வேறு தொழில்நுட்பங்கள் என்னிடம் இருக்கின்றன.

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சொட்டுநீர் பாசன முறைகளை அரசுத் துறைகள் அறிமுகம் செய்து விவசாயிகளும் அதைச் பின்பற்றிவருகிறார்கள். அதைவிட சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்திருக்கிறேன்.

குடிநீர் பாட்டில்கள் மூலம் நேரடியாகத் தாவரத்தின் வேருக்குத் தண்ணீர் தரும் தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்திருக்கிறேன். எனது தொழில்நுட்பங்கள் குறித்து இளம் பொறியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். 'வாட்டர் லிட்ரசி பவுண்டேஷன்' என்ற என்னுடைய அலுவலகத்தைச் சென்னையில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார் அவர்.

தண்ணீரைச் சேகரித்துப் பயன்படுத்தும் வழிமுறைகளை உலகுக்குச் சொல்லும் இவர் வான்மழை போலவே போற்றப்பட வேண்டியவர்தான்.

ஐயப்பா மசாகியின் விவசாய சேவைக்காக அசோகா  fellowship, Jamnalal Bajaj உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 2012 ம் ஆண்டு 600 செயற்கை ஏரிகளை உருவாக்கி சாதனை புரிந்ததற்காக, லிம்கா சாதனை புத்தகத்தில் இவரது நிறுவனம் இடம்பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 70,000 போர்வெல்கள் இவரது நிறுவனத்தால் போடப்பட்டிருப்பதும் பெரும் சாதனைதான். 

ஐயப்ப மசாகியைத் தொடர்புகொள்ள: 
Mobile: +91 94483 79497
Phone: +91 (0)80 23339497



Water Literacy Foundation
Mr. Ayyappa Masagi (Founder and director)
No. 347, Parvathi Nilaya, Kallappa Layout, Amruthahalli,
Sahakarnagar Post, Bengaluru – 560092

No comments:

Post a Comment