Monday 17 October 2016

நீர் போராட்டக் கதைகள்-வாசிமலை

நீர்நிலைகளை -குறிப்பாக மானவாரி நிலங்கள் அதிகமுள்ள தென் தமிழ் நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் நீர்நிலைகளைக் காப்பாற்ற, வயலகம் என்ற அமைப்பின் வழி பணியாற்றி வருகிறது தானம் அறக்கட்டளை. 1992ம் ஆண்டு தொடங்கி, தற்போதுவரை ஆயிரக்கணக்கான கண்மாய்கள் மற்றும் ஊருணிகளை சீரமைத்தும், ஊருணிகள் இல்லாத பகுதிகளில் ஊருணிகளை அமைத்துக் கொடுத்தும் விவசாயிகள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த அமைப்பை நிறுவியவர் எம்.பி.வாசிமலை. அஹமதாபாத் IIMல் நிர்வாகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். வாசகர்களின் கேள்வியை அடுத்து, நீர்நிலைகளின் முக்கியத்துவம், அவற்றைப் பராமரிப்பது எப்படி, அதில் அவரது அமைப்பு சந்தித்த சவால்கள் குறித்து ‘புதிய தலைமுறை’ அவருடன் உரையாடியது. உரையாடலிலிருந்து...




புதிய தலைமுறை: தமிழகத்தில் கண்மாய்களின் அழிவிற்கு முக்கிய காரணம் என்ன?

கண்மாய்களின் அழிவுக்கு முதல் முக்கியக் காரணம் ஆக்கிரமிப்பு. பல நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சாலைகளாகவும், கட்டிடங்களாகவும் மாறிவிட்டதால், நீர்வரத்தின்றி கண்மாய்கள் அழிந்துவருகின்றன. கண்மாய்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பாசன வசதி பெற முடியாத விவசாயிகள், விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். விவசாயம் செய்ய முடியாத நிலங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டு வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. நகர்மயமாதல் கண்மாய்களின் அழிவிற்கு மற்றொரு முக்கிய காரணம். ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனச் சட்டம் இருந்தாலும் அது முழுவீச்சில் செயல்படுத்தப்படுவதில்லை. அது மட்டுமல்ல, அரசே பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்கின்றது என்பது கொடுமையான விஷயம். இன்றும் பல அரசு கட்டிடங்கள் கண்மாய்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. நான்கு வழிச் சாலை திட்டத்திற்காக பல கண்மாய்கள் அழிக்கப்படுவதை நாம் கண்கூடாகப் பார்த்திருப்போம். நகர்பகுதிகளில் கண்மாய்கள் அழிந்துவருவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து மக்கள் தண்ணீருக்காக அலைகின்றனர்.இன்று தண்ணீர் கேன்கள், பாட்டில்கள் அதிக அளவு நகர்புறங்களில்தான் விற்பனை ஆகின்றன. கண்மாய்கள் காப்பாற்றப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

பு.த.: இந்த நிலையை எப்படி மாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்?

கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் மக்கள் நிர்வாகத்தைக் கொண்டுவர வேண்டும். அதாவது ஒரு ஊரில் உள்ள கண்மாயை, அந்தக் கிராமத்தில் உள்ள குழு ஒன்று பராமரித்து வர வேண்டும். இதில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. மக்கள் எந்த நடவடிக்கைக்கும் அரசை எதிர்பார்த்து காத்திருக்கக் கூடாது. இதற்குப் பழங்காலத்தில் ‘குடிமராமத்து முறை’ என்று பெயர். தென்னிந்தியாவில் நம் மூதாதையர்கள், வேறு எங்கும் காண முடியாத அளவிற்கு கண்மாய்கள் மூலம் நீர் நிர்வாகம் செய்துள்ளனர். அதைக் காக்க வேண்டும். சிறிய விவசாயிகளுக்கு பலனளிக்கக் கூடிய சிறு மற்றும் குறு கண்மாய்கள், பல தலைமுறைக்கும் பயனளிக்கும் வகையில் சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என்றால் கண்மாய்களை மக்கள் நிர்வாகம் செய்யவேண்டும். அதிலும் முக்கியமாக விவசாய அமைப்புகள் ஒவ்வொரு கிராமத்திலும் வலுப்பெற வேண்டும். முற்காலத்தில் நீர்நிலைகளை நிர்வகித்த மக்களிடம் தற்போது அந்த உரிமை இல்லை. அதை மீண்டும் அவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

பு.த.:நீர்நிலைகளை மக்களே நிர்வகிக்க வேண்டும் என்ற திட்டம் சாத்தியமா?

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் ஒவ்வொரு கண்மாயை நிர்வாகம் செய்வதற்கு அக்கண்மாயின் பயனாளிகள் குழு ஒன்று இருக்கும். இந்தக் குழு அந்தக் கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளிடமிருந்து சிறுதொகையை வசூல் செய்து கண்மாயைப் பராமரிக்கும் மேலும் ஒவ்வொரு விவசாயியும் தன்னார்வத்தோடு கண்மாய்களை செப்பனிடும் பணியில் உதவியுள்ளனர்.இந்தக் குடிமராமத்துமுறை, நீர்நிலைகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையின்கீழ் கொண்டு வரப்பட்டதால் அழிந்தது.

தற்போது மீண்டும் அந்த முறையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். முதலில் நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். நீர்நிலைகளின் அழிவால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை புரிய வைக்கிறோம். நீர்நிலைகளை சீரமைக்க மக்கள் 25 சதவிகித நிதியை அளிக்கின்றனர். மீதமுள்ள 75 சதவிகித நிதியை நாங்கள் பிற நிறுவனங்களின் உதவியோடு வழங்குகிறோம். நீர்நிலைகள் இல்லாத அல்லது அழிந்துபோன கிராமங்களில் மக்கள் உதவியுடன் புதிய நீர்நிலைகளை அமைத்துத் தருகிறோம். நாங்கள் வேலை செய்யும் கிராமங்களில் ஒப்பந்ததாரர் முறையை ஏற்பதில்லை. சீரமைப்பு, புனரமைப்பு ஆகிய பணிகளில் மக்களே ஈடுபட வேண்டும் என்பதை தொடர்ந்து பல்வேறு நிலைகளில் வலியுறுத்தி வருகிறோம்.

நீர்நிலைகள் அமைத்து தருவதோடு நின்றுவிடாமல் அந்த நீர்நிலைகளை தொடர்ந்து பராமரிக்க விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்றையும் அமைக்கிறோம். திட்டமிடுதல் எப்படி என இக்குழுக்களுக்கு கற்றுத் தருகிறோம்.கிராமங்களில் உள்ள ஒவ்வொரு கண்மாய்களையும் பராமரிக்க வருங்கால வைப்பு நிதியை உருவாக்குகிறோம். இதில் 50 சதவிகித நிதியை கிராம மக்களிடமும் 50 சதவிகித நிதியை பிற நிறுவனங்களிலிருந்தும் பெற்றுத் தருகிறோம். இந்த நிதியின் மூலம் கிடைக்கும் வட்டி, கண்மாய்களை தொடர்ந்து பராமரிக்க உதவும்.

விவசாய குழுக்களை ஊக்கப்படுத்த குறுநிதி குழுக்களை உருவாக்கி கடனுதவி திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தினோம். தற்போது கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்குள் 70 கோடி ரூபாய் வரை பணச் சுழற்சி நடைபெறுகிறது. மக்களே ஒருங்கிணைந்து நிதி நிர்வாகத்தைக் கவனிப்பதால், இதில் எந்த வகையிலும் தவறு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை.

கண்மாய்களை வெறும் பாசன வசதியை அளிக்கும் ஓர் அமைப்பாகப் பார்க்காமல் அதை ஒரு பொருளாதார மண்டலமாகப் பார்க்கிறோம். கண்மாய்களில் மீன் வளர்த்தால் நல்ல லாபம் பெற முடியும்.எனவே விவசாயிகளிடம் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்துகிறோம். கடந்த 4 ஆண்டுகளாக 150 கண்மாய்களில் மீன்வளர்ப்பை ஊக்குவித்து வருகிறோம். கண்மாய்களின் ஒரு மூலையில் 6 அடி ஆழத்திற்குக் குழிகளை வெட்டி வைத்தால், கண்மாய்களில் நீர் இல்லாத காலங்களிலும் மீன் வளர்க்க முடியும்.இதுபோன்ற பல மாற்று முயற்சிகளிலும் இறங்கி வருகிறோம்.

எங்களிடம் சிறந்த பொறியியல் வல்லுநர்களும், களப்பணியாளர்களும் இருப்பதால் அனைத்து வேலைகளையும் மக்கள் பங்கேற்போடு சிறப்பாக செய்து முடிக்க முடிகிறது.

பு.த.: கிராம மக்களை அணுகியபோது, அவர்களின் மனநிலை எப்படி இருந்தது? மக்களை ஒருங் கிணைப்பதில் பிரச்சினைகள் இருந்ததா?

முதலில் மக்களை நாங்கள் அணுகிய போது அவர்களுக்கே அவர்களின் மீது நம்பிக்கை இல்லை. அந்த அவநம்பிக்கை எங்களுடைய நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு நம்பிக்கையாக மாறியது. விவசாயக் குழுக்கள் அமைக்கும்போது பல பிரச்சினைகள் எழுந்தன. திருவிழாவில் ஏற்பட்ட சண்டைகள் கூட இங்கு பிரதிபலிக்கும். எல்லா கண்மாய்களிலும் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சில கண்மாய்களிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க 3 ஆண்டுகள் கூட ஆகியுள்ளன.

பு.த.: இந்த முயற்சியில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

கடந்த 20 வருட காலத்தில் நிறைய கற்றுக்கொண்டோம். முதலில் ஒருசில கண்மாய்களாக சீரமைக்கத் தொடங்கிய நாங்கள், பின்னர் 100 கண்மாய்களாக எங்கள் திட்டத்தை விரிவுபடுத்தினோம்.கண்மாய்கள் அனைத்தும் சங்கிலித் தொடராக இணைக்கப்பட்டிருக்கும். இந்தச் சங்கிலித் தொடரில் ஒரு கண்மாய் பாதிக்கப்பட்டாலும் அடுத்துவரும் அனைத்து கண்மாய்களும் பாதிக்கப்படும். ஆக்கிரமிப்பின் காரணமாக சங்கிலித் தொடரை இணைக்கும் நீர்வரத்து கால்வாய்கள் அழிந்துவிட்டன. எனவே கண்மாய்களின் சங்கிலித் தொடரை சீரமைக்கும் பணியில் இறங்கினோம்.

கண்மாய்கள் பல்லுயிர் ஓம்புதலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆடு, மாடு, மீன், தாவரங்கள் எனக் கண்மாய்களினால் பயன்பெறும் உயிரினங்கள் அதிகம். கண்மாய்கள் ஒரு பொருளாதார மையமும் கூட. விவசாயத்திற்கு மட்டுமல்லாது மீன் வளர்த்தல், பாசி வளர்த்தல் போன்ற பல வேலைவாய்ப்புகளையும் கண்மாய்கள் நமக்கு அளிக்கின்றன. எனவே கண்மாய்களில் மீன் வளர்த்தல், பாசி வளர்த்தல் போன்றவற்றை ஊக்கப்படுத்தினோம். அதன்பின்னர் எங்களுடைய செயல்பாடுகளை விரிவுபடுத்தி குண்டாறு பாசனப் பகுதிக்கு உட்பட்ட 2,000 கண்மாய்களை மேம்படுத்தும் பணியில் இறங்கினோம். இதுவரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில் சுமார் 1,500 கிராமங்களில் வேலை செய்துள்ளோம். ராமநாதபுரம் போன்ற மானாவாரி நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைத்துக் கொடுக்கிறோம். நிலத்தின் ஒரு மூலையில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டைகள் மழை பெய்யும் காலங்களில் நீரை தேக்கி வைத்துக் கொள்ளும். மழை தொடர்ந்து பெய்யாமல் பயிர்கள் கருகும் நிலை வரும்போது பண்ணைக்குட்டைகளில் தேங்கியுள்ள நீர் பயிர்களை காப்பாற்றும். ராமநாதபுரம் மாவட்டம் சவேரியார் பட்டணம் என்னும் ஊரில் 360 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு அத்திட்டம் வெற்றியும் பெற்றுள்ளது.

பு.த.: நிதித்தேவைகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

எங்களுடைய முக்கியத் தடையாகப் பணம் இருக்கிறது. மக்கள் 25 சதவிகித பணத்தை அளித்தாலும் மீதமுள்ள 75 சதவிகித பணத்தை நாங்கள் அளிப்பது அனைத்து இடங்களிலும் சாத்தியமில்லை. தற்போது டாட்டா, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனி லிவர் போன்ற நிறுவனங்களோடும் ஐரோப்பிய ஒன்றியத்தோடும், நெதர்லாந்து நாட்டிலுள்ள சில வங்கிகளோடும் இணைந்து நீர்நிலை மேம்பாட்டிற்கான நிதியுதவிகளைப் பெற்றுத் தருகிறோம். இன்னும் பல நிறுவனங்கள் இந்த முயற்சியில் பங்கேற்கும்போது, அதிக கண்மாய்களை சீரமைக்க முடியும். இதுகுறித்து பல நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்.

பு.த.: நீர்நிலைகளைப் பராமரிப்பதில் இளைஞர்களை எப்படி பங்கேற்கச் செய்யலாம்?

இளைஞர்கள் அதிகம் பங்கேற்கும் NCC, NSS செஞ்சிலுவைச் சங்கம் போன்ற மாணவர் இயக்கங்கள் நீர்நிலைகளை பாதுகாக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும். அவர்களுக்கு நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, மனமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 நாட்களையாவது நீர்நிலைகள் பராமரிப்பிற்காக தங்களுடைய உடலுழைப்பை ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

ஊர் கூடியது நீர் ஊறியது



குடிதண்ணீர் இல்லாமல் தவித்த ஓர் கிராமத்தின் தாகத்தைத் தீர்த்து, தன்னிறைவு பெற வைத்திருக்கிறது ஓர் அமைப்பு

ஊர்ல குடிதண்ணீர் கிடையாது...காலைல, சாயங்காலம்னு தெனம் ரெண்டு முறை 4 மைல் நடந்தே போயி தண்ணீர் எடுத்துட்டு வரணும். ஊத்து தோண்டிட்டு விடியிறவரை தண்ணீர் ஊறுறதுக்காக காத்துக் கெடக்கணும். எப்ப கொடம் நிறையுதோ அப்பதான் வீட்டுக்கு வர முடியும். சின்னப் பிள்ளைங்களும் அதுக பங்குக்கு சின்னக் குடத்த தூக்கிட்டு வரும்ங்க. ஆனா, இப்போ எங்க ஊர்லயே குடிதண்ணீர் ஊரணி இருக்கு. பல வருஷமா தண்ணீருக்காக ஊர் ஊரா அலைஞ்ச நிலைமை மாறி, இப்போ பக்கத்து ஊர்க்காரங்க எங்க ஊர் ஊரணியில தண்ணீர் எடுத்துட்டுப் போறாக" என்று சொல்கிற சரஸ்வதியிடம் சந்தோஷப் பெருமை பொங்குகிறது. 

மு.கடம்பன்குளம் - இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியனைச் சேர்ந்த சிறிய கிராமம். சுமார் 80 ஏக்கர் விவசாய நிலம் கொண்ட இந்தக் கிராமத்தை குடிநீர்ப் பஞ்சம் கடுமையாக வாட்டியது. அன்றாட உபயோகத்திற்குக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்தனர் மக்கள். சுத்தமான குடிநீர் என்பது பெயரளவுக்குக் கூட இல்லை. கண்மாயில் உள்ள நீரை எடுத்து, அப்படியே குடிநீராகப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை மண்ணிற்கு பஞ்சம் பிழைக்க செல்ல ஆரம்பித்தனர்.

குடிக்க குடிநீரும் இன்றி, விவசாயத்திற்கு மழை நீரை சேகரிக்கவும் வழி இல்லாமல் கையறு நிலையில் இருந்த கடம்பன்குளம் மக்கள், கமுதி பகுதியில் கண்மாய்கள் சீரமைப்பில் இருந்த தானம் அறக்கட்டளையினரை அணுகினார்கள். அப்புறம் என்ன நடந்தது? 

ராசா காலத்துல வெட்டிக் கொடுத்த கண்மாய் ஒண்ணு ஊருல இருந்ததா சொல்லுவாங்க. ஆனா, எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து கண்மாய் இருந்த இடத்துல முள்காடுதான் இருக்கு. கடைசியா காமராசர் காலத்துல அந்தக் கண்மாய தூர்வாருனதா சொல்லுவாங்க. கண்மாய் மேடு தட்டி இருக்கிறதால மழை பெய்தாலும் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. இதனால, விவசாயமும் போச்சு. கால்நடைகளையும் வளர்க்க முடியல. நானே பல தடவை தஞ்சாவூருக்குப் பிழைப்புக்காகப் போயிருக்கேன்.கடைசியில கண்மாய், ஊரணி இல்லாததுதான் தண்ணீர்ப் பிரச்சினைக்குக் காரணம்னு தெரிஞ்சாலும், கண்மாய் வெட்டுற அளவுக்கு எங்களுக்கு பணவசதி இல்லை.

அந்த நேரத்துலதான் தானம் அறக்கட்டளைய அணுகும்போது எங்க ஊருக்கு வந்து, ஊரணி வெட்டித்தருவதா சொன்னாங்க. ஆகுற செலவுல நான்கில் ஒரு பங்கு, எங்க ஊர் மக்கள் கொடுக்கணும்னு சொன்னாங்க. ஆனா, அப்போதைய சூழ்நிலையில எங்களால அவ்வளவு தொகை கொடுக்க முடியல. ஊர்கூடி முடிவு பண்ணி, எங்க பங்கை உடல் உழைப்பால கொடுக்கிறதா ஒத்துக்கிட்டோம். அதாவது, ஒவ்வொரு குடும்பமும் ஒரு குழி எடுத்து கண்மாயை தூர்வார ஆரம்பிச்சோம். 1,10,000 ரூபாய் செலவுல எங்க கண்மாயை மீட்டெடுத்தோம். 2009ம் ஆண்டு 4 லட்ச ரூபாய் செலவுல கண்மாயை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தினோம். போர்வெல் போட்டிருக்கோம். அதில கிடைக்கிற தண்ணீரை வச்சு மிளகாய் பயிர் செய்யுறோம்.

இதனால, விவசாயம் வளர்ந்தது மட்டுமில்லாம கண்மாயில் மீன் வளர்க்கவும் தொடங்கினோம்.இப்போ ஒவ்வொரு வருசமும் மீன் வளர்ப்பினால 50,000 ரூபாய் லாபம் கிடைக்குது. அடுத்த வருடம் கிடைக்கும் லாபத்தையும் சேர்த்து வேற ஒரு ஊர்ப்பணியைச் செய்வோம்" பூரிப்போடு விவரித்தார் விவசாயி சோணைமுத்து. 

முதலில் ஊர்க் கண்மாயை தானம் அறக்கட்டளையுடன் இணைந்து சீரமைத்த கடம்பன் குளம் மக்கள், தங்களுடைய அடுத்த முக்கியத் தேவையான குடிநீருக்காக ஊரணி ஒன்றை அமைக்கவும் முடிவு செய்தனர். 2006ம் ஆண்டு மீண்டும் தானம் அறக்கட்டளை மற்றும் கபார்ட் நிறுவனம் உதவியோடு குடிநீர் ஊரணி வெட்டப்பட்டது. 

தொடர்கிற சோணைமுத்து, கால்நடைகள் ஊரணிக்குள்ள வராம இருக்க சுத்தி, வேலி போட்டுருக்கோம். வருசத்துக்கு ஒரு முறை ஊர்ல உள்ள மக்கள் எல்லாம் கூடி, ஊரணியை சுத்தி இருக்கிற செடி, கொடிகளை அகற்றி சரிப்படுத்துவோம். யாரும் செருப்பு போட்டு உள்ளே வரக்கூடாது என்பது ஊர்க்கட்டுப்பாடு. காலைல 3 மணி நேரம், சாயந்திரம் 3 மணி நேரம் கதவைத் திறப்போம். அந்த நேரத்துல மட்டும்தான் தண்ணீர் எடுக்கணும். பக்கத்து ஊர்க்காரங்களும் தண்ணீர் எடுக்க வருவாங்க. பல வருசம் நடையா நடந்து தண்ணீர் சுமந்த எங்க கிராமப் பொம்பளைங்க இப்பதான் உஸ்... அப்பாடான்னு இருக்காங்க" என்கிறார். 

1997ம் ஆண்டு முதுகுளத்தூரை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட வயலகம் திட்டம் மூலம் தற்போதுவரை கடம்பன்குளம் மட்டுமில்லாமல் முதுகுளத்தூர், கமுதி பகுதிகளைச் சுற்றியுள்ள சுமார் 164 கிராமங்களில் 164 நீர்நிலைகளைச் சீரமைத்தும், புதிதாக கட்டிக்கொடுத்தும் இருக்கிறோம். கண்மாய்களைச் சீரமைக்க மக்களுக்கு எண்ணமிருந்தாலும், அதிகாரிகளை அணுக ஒருவித தயக்கம் இருக்கிறது. இதை மாற்ற நாங்களே கிராம மக்களை தேடிச் சென்று கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகளைக் கட்டமைத்து மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பணிகளைச் செய்கிறோம். கடம்பன்குளம் மக்களின் நிர்வாகத்தில் அந்த ஊர் ஊரணி, கண்மாய் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. இதுதான் நாங்கள் எதிர்பார்த்தது" என்கிறார், தானம் அறக்கட்டளையின் மூத்த திட்ட அலுவலர் வெள்ளையப்பன்.

கடம்பன்குளம் மக்கள் குடிநீருக்குத் தவித்ததையும், ஊரணியால் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும் விளக்கும், ‘ஒரு ஊர்ல ஒரு ஊரணி’ என்ற ஆவணப்படமும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊர் கூடிக் கைகோர்த்தால், பாலையிலும் நீர் சுரக்கும் என்பதற்கு கடம்பன்குளம் ஓர் உதாரணம்.

ADDRESS: 

DHAN Foundation
(Development of Humane Action)
Kennet Cross Road
Near Seventh Day School
1A, Vaidyanathapuram East
Madurai 625 016, Tamil Nadu, INDIA

PHONE:
Tel : +91-452-2610794, 2610805 Fax : +91-452-2602247

EMAIL:
Email: dhanfoundation@dhan.org 

Website: 

1 comment:

  1. அருமையான ஒத்துழைப்பு கொடுத்ததற்காக மக்களை பாராட்ட வேண்டும்

    ReplyDelete