Monday 17 October 2016

நீர் போராட்டக் கதைகள்- அருண் கிருஷ்ணமூர்த்தி



பார்க்க பத்தாம் வகுப்பு மாணவர் மாதிரி இருக்கிறார் அருண் கிருஷ்ணமூர்த்தி. ஆனால், செயலும், நோக்கமும் படுமுதிர்ச்சி. இந்தியா முழுதுமுள்ள ஏரி, குளங்களைத் தூய்மைப்படுத்தி பாதுகாப்பது; ஏரியைச் சுற்றிலும் மரக்காடுகள் அமைத்து அழிந்து வரும் உயிரினங்களுக்கு வாழ்விடமாக்கித் தருவது... இதுதான் இவரின் முழுநேர சேவை!

இரண்டாண்டுகளில் 11 ஏரிகளை புனரமைத்திருக்கிறார் இந்த 24 வயது இளைஞர். இவரது, ‘என்விரான்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அமெரிக்காவின் கூகுள் சோஷியல் இம்பாக்ட் அவார்ட், குளோபல் யூத் லீடர்ஷிப் அவார்ட், சமீபத்தில் வாங்கிய சுவிட்சர்லாந்தின் ரோலக்ஸ் விருது என இவரின் உத்வேகத்துக்கு சர்வதேச அங்கீகாரங்கள் எக்கச்சக்கம்!

‘‘இந்த உலகமே தனக்கானதுன்னு மனுஷன் நினைக்கிறான். ஆனா, இன்னும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கும் இந்த பூமியில பங்கிருக்கு. ஏற்கனவே மனுஷனோட ஆதிக்கத்தால 60 சதவீதம் இயற்கை வளங்கள் சிதைஞ்சு போயிடுச்சு. ஏகப்பட்ட உயிரினங்கள் அழிஞ்சும் போச்சு. நாமறிஞ்சு பலிகொடுத்த உயிரினம், சிட்டுக்குருவி. இப்படியே போனா, அடுத்த தலைமுறைக்கு எதுவும் இருக்கப் போறதில்லை’’ - உண்மை உணர்வுடன் வெடித்துப் பேசுகிறார் அருண். 

தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூரைச் சேர்ந்த அருணின் அப்பா செல்லசுப்பிரமணியன் இன்சூரன்ஸ் நிறுவன வளர்ச்சி அதிகாரி. அம்மா ரூமா பேராசிரியை. கூகுள் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அருண், இயற்கைப் பணிக்காக தன் வேலையையும் விட்டுவிட்டார். 

‘‘எனக்குத் தெரிஞ்சு முடிச்சூர்லயே ஏரியும் குளங்களும் இருந்துச்சு. நரி, பாம்பு, ஆந்தைன்னு விலங்குகள் ஓடி விளையாடினதைப் பாத்திருக்கேன். இன்னைக்கு இந்த கான்க்ரீட் காட்டுல மனுஷனைத் தவிர வேறெந்த உயிரினத்தையும் காணோம். யாருக்கும் இதைப்பத்தி கவலைப்பட நேரமில்லை. 20 வருஷத்துக்கு முன்னாடி 1 லிட்டர் தண்ணி 20 ரூபா விக்கும்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. இன்னைக்கு தண்ணி மிகப் பெரிய சந்தைப்பொருளா மாறிடுச்சு. நாளைக்கு காத்தும் சந்தைக்கு வந்திடும். இயற்கைக்கு எதிரான செயல்களுக்கு மனுஷன் கொடுக்கப்போற விலை இதுதான்.’’ - கோபத்துக்கும் ஆதங்கத்துக்கும் இடைப்பட்ட ஓர் உணர்வு அருணின் பேச்சில். 

‘‘சின்ன வயசுல மர விதைகளை சேகரிச்சு ஏரிகளைச் சுத்தி புதைச்சு வப்பேன். விலங்குகள் பத்தி நிறைய படிப்பேன். கல்லூரியில சேர்ந்த பிறகு, நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. கூகுள்ல வேலைக்குச் சேர்ந்ததும் கூடுதல் சுதந்திரம்... எதுக்கும் அப்பாவை எதிர்பார்க்க அவசியமில்லை. நிறைய பசுமை இயக்கங்கள் இருக்கு. பல பேர் பேசுறாங்க. சில பேர் தங்களால இயன்றதை செய்யிறாங்க. நான் என்ன செய்யப்போறேங்கிறதை முதல்லேயே முடிவு பண்ணிட்டேன். விலங்குகளைப் பாதுகாக்கிறது, அதுகளோட வசிப்பிடங்களைப் பாதுகாக்கிறது... இதுதான் என் ப்ளான். இதுக்குள்ள மற்ற சூழலியல் பிரச்னைகளும் அடங்கிடும். 

சுற்றுச்சூழல் பிரச்னையால அடுத்த தலைமுறைக்குத்தான் அதிக பாதிப்பு. அதனால அவங்க மூலமாவே இதைச் செய்யணும்னு முடிவெடுத்தேன். ஒவ்வொரு ஸ்கூலா படியேறினேன். ‘மனுஷனைப் போல விலங்குகளும் சுதந்திரமா வாழ வழியமைச்சுக் கொடுப்போம், என்கூட வாங்க’ன்னு கூப்பிட்டேன். ஒவ்வொரு பள்ளிக்கூடத்துலயும் 300 பேர் கை தட்டினாங்க. 30 பேர் கடிதம் போட்டாங்க. 3 பேர் கையில மண்வெட்டியோட களத்துக்கு வந்தாங்க. 

இப்படி 50 பேரை சேர்த்துக்கிட்டு ஐதராபாத்ல உள்ள மியாப்பூர் குருநாதம் ஏரிக்குள்ள இறங்குனோம். ஏரியைச் சுத்தி வாழுற மக்களும் எங்ககூட இணைஞ்சாங்க. கரைகள்ல மரக்கன்றுகளை நட்டோம். பராமரிப்புக்கு ரெண்டு பேரை நியமிச்சோம். கழிவு நீர் வர்ற வழிகளை கண்டுபிடிச்சு அடைச்சோம். இன்னைக்கு அந்த ஏரியோட சூழல்ல பல நூறு உயிரினங்கள் வாழ்ந்துக்கிட்டிருக்கு.   
எதையும் வெறும் வார்த்தைகளா சொன்னா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. செயல்ல காட்டணும். ஐதராபாத்தைப் பொறுத்தவரை பிளாஸ்டிக் கழிவுகள், மிகப்பெரும் பிரச்னை. பழைய நியூஸ் பேப்பரை வாங்கி, நாங்களே பேப்பர் பேக் செஞ்சு கடை, கடையாப் போய் கொடுத்தோம். இந்தப் பணியில நிறைய தொண்டு நிறுவனங்களும் இணைஞ்சாங்க. இன்னைக்கு அது மிகப்பெரிய இயக்கமா ஐதாராபாத்ல நடந்துக்கிட்டு இருக்கு. 

என் செயல்திட்டத்துக்கு நான் பார்த்த வேலை இடைஞ்சலா இருந்துச்சு. யோசிக்காம ரிசைன் லெட்டர் கொடுத்திட்டேன். என் குடும்பம் பெரிய பணக்காரக் குடும்பம் இல்லே. அதே நேரம், என் வருமானத்தில சாப்பிட வேண்டிய நிலையும் அப்பா, அம்மாவுக்கு இல்லை. என் முடிவுல அவங்களுக்கு ஒரு வருத்தமும் இல்லை. 

பணிகளை ஒருங்கிணைச்சு விரிவுபடுத்த அமைப்பைத் தொடங்குனேன். ஐதராபாத்துல ஒரு வலுவான மாணவர் குழுவை உருவாக்கி அவங்ககிட்ட செயல்திட்டத்தை ஒப்படைச்சுட்டு சென்னைக்கு வந்துட்டேன். இங்கேயும் பள்ளி, பள்ளியா போய் மாணவர்களை சந்திச்சேன். உற்சாகமா மாணவர்கள் என்கூட இணைஞ்சாங்க. முதல்ல முடிச்சூர் லக்ஷ்மி நகர் குளம், அடுத்து முடிச்சூர் ஏரி, வளசரவாக்கம் சிவன்கோவில் குளம். இப்பதான் தொடங்கியிருக்கோம். சென்னையில நிறைய வேலை இருக்கு. 

ஏரியைத் தூய்மைப்படுத்துறது, ஒரே வேலையில்லை. வேலி போடுறது, சுத்திலும் காடு வளர்க்கிறது, அசுத்தப்படாம பாதுகாக்கிறது, வாழும் உயிரினங்களை ஆய்வு பண்றதுன்னு பல அம்சங்கள் இருக்கு. அதிகாரிகள் உதவியோட நீர் நிலைகள்ல இருக்கிற ஆக்கிரமிப்புகளை காலி பண்ண முயற்சி எடுத்திருக்கோம். ஏகப்பட்ட எதிர்ப்புகள். யாரெல்லாம் எதிர்க்கிறாங்களோ, அவங்க வீட்டுப் பிள்ளைகளும் எங்க குழுவில இருக்காங்க’’ என்கிறார் அருண். 

சென்னையில் 317 மாணவர்கள் அருணோடு இணைந்து இயங்குகிறார்கள். சென்னை, ஐதராபாத் தவிர மற்ற நகரங்களிலும் இவர்களின் களப்பணி நீள்கிறது. தற்போது துபாய், சிங்கப்பூரிலும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணி நடக்கிறதாம். ‘‘உலகம் முழுதும் ஏதோ ஒரு காரணத்துக்காக இயற்கையை குலைச்சுக்கிட்டே இருக்காங்க. இயற்கையைப் புனரமைக்கிற வேலை, ஒரு கிராமத்துலயோ, நகரத்துலயோ நடந்தாப் போதாது. உலகம் முழுக்க எல்லாரும் களத்துக்கு வரணும். அந்த உணர்வைத் திரட்டுற சக்தி மாணவர்களுக்குத்தான் இருக்கு. அடுத்த மூணு வருஷத்தில, இந்தியா முழுவதுமுள்ள 20 பெரிய ஏரிகளை புனரமைக்க முடிவு பண்ணியிருக்கோம்’’ என்று உற்சாகம் காட்டுகிறார் அருண்.

‘கூகுள் சோஷியல் இம்பாக்ட்’ விருதோடு கிடைத்த மூன்றரை லட்சத்தில், விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கியிருக்கிறார் அருண். சென்னையிலும், ஐதராபாத்திலும் இரண்டு அனிமல் ஹோம் கட்டி முடித்திருக்கிறார். 

‘‘எனக்கும் மத்தவங்களைப் போல வீடு கட்டணும்னும் ஒரு வாகனம் வாங்கணும்னும் கனவு இருந்துச்சு. ரெண்டும் நிறைவேறிடுச்சு. நான் கட்டியிருக்கிற வீட்டில என் கூட தங்கப்போறதும், என் வாகனத்துல பயணிக்கப்போறதும் என் சக ஜீவிகளான விலங்குகள்!’’ 
- எந்த அலட்டலும் இல்லாமல் இதைச் சொல்கிறார் அருண்.

- வெ.நீலகண்டன் (குங்குமம்)

தினமலர் கட்டுரை:
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33558&ncat=19&Print=1


தொடர்பு:
Arun Krishnamurthy:
9940203871

Mail us at: arunoogle@gmail.com, efievents@gmail.com

website: http://www.indiaenvironment.org/

No comments:

Post a Comment