Monday 17 October 2016

நீர் போராட்டக் கதைகள்- ராஜேந்திர சிங்



உ.பி-யைச் சேர்ந்த ராஜேந்திர சிங், ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர் (1959). ஆயுர்வேதத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ராஜஸ்தானில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளில் மனம் வெறுத்த ராஜேந்திர சிங், `தருண் பாரத் சங்' என்ற அமைப்பில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். 1985-ம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அல்வார் மாவட்டத்தின் கோபால்புரா என்ற கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவச் சேவையுடன், கல்வி கற்பிக்கும் வேலையையும் தொடங்கினார். அந்த ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. ‘இந்த ஊருக்கு இப்போதைய அவசியத் தேவை கல்வி அல்ல; தண்ணீர். நீ நிஜமாகவே ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் ஊர்க் குளத்தைத் தூர்வாரிக் கொடு’ என்றார் முதியவர் ஒருவர். ராஜேந்திர சிங்கை அந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. `குளத்தைத் தூர்வாரப்போகிறேன். உதவிக்கு வாருங்கள்' என ஊர் மக்களை அழைத்தார். `யாருடா நீ?' என்பதுபோல விநோதமாகப் பார்த்தார்கள். உடன் வந்த நண்பர்களும் விலகிப்போனார்கள்.

ராஜேந்திர சிங், மனம் தளரவில்லை. தனி ஒருவராக மண்வெட்டி, கடப்பாரையுடன் வறண்ட குளத்தில் இறங்கினார். தினமும் குறைந்தது 10 மணி நேரமாவது உழைத்தார். ‘பாவம், பைத்தியம்...’ என ஊர்க்கண்கள் பரிதாபமாகப் பார்த்தன. வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ராஜேந்திர சிங் சிந்திய வியர்வையால், குளத்தின் பரப்பளவு நீளமும் ஆழமுமாக விரிந்தது. பின்னர் பெய்த மழையில் குளத்தில் நீர் தங்கியது. அருகில் இருந்த கிணறுகளும் உயிர்த்தன. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. கோபால்புரா மக்களின் மனதில் ராஜேந்திர சிங்கும் உயர்ந்தார். அப்போது வயதானவர்களும் பெண்களும் நோஞ்சான் குழந்தைகளுமே கோபால்புராவில் மிஞ்சியிருந்தனர். பிழைப்புக்காக வெளியூர் சென்றிருந்த ஆண்கள் பலரும், குளம் புத்துயிர் பெற்றதை அறிந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரத் தொடங்கினர். மக்களும் ராஜேந்திர சிங்குடன் கைகோத்தனர்.

கோபால்புராவில் நிகழ்ந்த மாற்றம் அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கும் ஜிலுஜிலுவெனப் பரவியது. அவர்களும் வறட்சியை நீக்குவதற்கான புரட்சிக்குத் தயாராக இருந்தார்கள். ராஜேந்திர சிங், அந்த மக்களுக்கு வழிகாட்டினார். அடுத்த ஒரே ஆண்டில் 36 கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன / தூர் வாரப்பட்டன. அல்வாரில் கொஞ்சம் கொஞ்சமாக பசுமைப் புரட்சி வேரூன்றத் தொடங்கியது. அங்கு இருந்து ராஜஸ்தானின் பிற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. கிராமம் கிராமமாக பாதயாத்திரை சென்ற ராஜேந்திர சிங், மக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புஉணர்வைக் கொண்டுவந்தார். அடுத்த கட்டமாக, மக்களின் துணையுடன் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துபோன அர்வாரி நதியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆற்றுப்படுகைகளில் தடுப்பணைகளைக் கட்டுதல், ஆரவல்லி மலையில் சற்றே பெரிய அணை ஒன்றை எழுப்புதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்... என ராஜேந்திர சிங் மக்களுடன் உழைத்தார். அந்த மழைக்காலத்தில், அணையும் தடுப்பணைகளும் தண்ணீரால் தளும்பின. அர்வாரி பழைய பொலிவுடன் மீண்டும் சலசலத்து ஓட ஆரம்பித்தது. அர்வாரியைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? அந்த நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருக்கும் 70 கிராமங்களில் இருந்து, ஊருக்கு 2 பேர் வீதம் தேர்ந்தெடுத்து, 140 பேரைக் கொண்ட அர்வாரி நாடாளுமன்றத்தை அமைத்தார். (இது அங்கீகாரமற்ற அமைப்பு என்றாலும் நதி ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், அதிக நீர் உறிஞ்சுதலை, மரம் வெட்டுதலைத் தடுத்தல் என இன்று வரை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது).

சரிஷ்கா தேசியப் பூங்கா பகுதியில் அமைந்திருந்த ஏராளமான சுரங்கங்கள் அந்தப் பகுதியில் நீர் வளத்துக்குப் பெரும் இடையூறாக இருப்பதை அறிந்தார் ராஜேந்திர சிங். அகிம்சை வழியிலான போராட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும், மாஃபியாக்களின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் சுரங்கங்களை மூடவைத்தார். அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவரவர் கிராமங்களில் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகை செய்தார். ராஜேந்திர சிங்கின் அயராத முயற்சியால் சர்ஷா, பஹானி, ரூபரேல், ஜஹாஜ்வாலி உள்ளிட்ட வறண்டுபோன ராஜஸ்தானின் பல நதிகளும் புத்துயிர் பெற்றன.

ராஜேந்திர சிங், ராஜஸ்தானின் 11 மாவட்டங்களில் சுமார் 4,500 தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களை தண்ணீர்ப் பிரச்னையற்ற பகுதிகளாக மாற்றியிருக்கிறார். இதனால் நிலத்தடி நீரின்றி கறுப்பு மண்டலங் களாக அறிவிக்கப்பட்ட மாநிலத்தின் பல பகுதிகள், நிலத்தடி நீர் மிகுந்த வெள்ளை மண்டலங்களாக உருமாறியிருக்கின்றன. வனப்பகுதி விரிவடைந்திருக்கிறது. விளைச்சல் பல மடங்கு பெருகியிருக்கிறது. மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பிய ராஜஸ்தான் விவசாயிகள், நீர் அதிகம் தேவைப்படும் கரும்பு பயிரிடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றனர். இப்படியாக, சத்தமே இல்லாமல் ராஜஸ்தானில் மாபெரும் தண்ணீர்ப் புரட்சி ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ராஜேந்திர சிங்.

‘கடவுள் தமிழ்நாட்டுக்கு அதிக நீரைக் கொடுத்துக் கெடுத்துவைத்திருக்கிறார். ஆண்டுக்கு சராசரியாக 1,000 மி.மீ மழை பொழியும் தமிழ்நாடு, குடிநீர்ப் பஞ்சத்தில் சிக்குவது வாடிக்கை. அதில் பாதி அளவே மழை பெறும் பாலைவன ராஜஸ்தானில் தண்ணீர்ப் பிரச்னை இல்லை. ஏன்? சிந்தியுங்கள்! தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு அடியோடு இல்லை. மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் இங்குள்ள திட்டங்கள் பெயர் அளவுக்கே செயல்படுத்தப்படுகின்றன. அண்டை மாநிலங்களுடன் உள்ள நீர் சிக்கல்களை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தீர்த்துக்கொள்வது ஒரு பக்கம். அதற்கு முன்பாக முதலில் உங்கள் மாநிலத்துக்குள்ளேயே கிடைக்கும் தண்ணீர் வளத்தை முறையாக, முழுமையாகச் சேகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். அதில் மக்களை ஈடுபடுத்துங்கள். அது பெரிய வெற்றியைத் தரும் என்பது ராஜஸ்தான் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை’ என்பதே ராஜேந்திர சிங் தமிழ்நாட்டுக்கு வழங்கும் அறிவுரை.

-விகடன்

TARUN BHARAT SANGH
Village: Bheekampura – Kishori,
Block: Thanagazi, District: Alwar
State: Rajasthan, PIN: 301022.
INDIA.

E-mail Communication:
jalpurushtbs@gmail.com
mauliksisodia@gmail.com

Voice Communication:
+91 9414019456   /   +91 8769583579
+91 7597914465   /   +91 9414066765

Website: http://tarunbharatsangh.in/

No comments:

Post a Comment