Wednesday 1 March 2017

நீர் போராட்ட கதைகள் - ராஜேஷ் நாயக்

'இது விளையாத நிலம்... முழுவதும் செம்பாறைகளும், கடுமையானக் கற்களும் நிறைந்தது. இதில் விவசாய முயற்சிகள் எடுப்பது வெறும் வீண் வேலை!”  - இவைதான் இரண்டாண்டுகளுக்கு முன்னால் ராஜேஷுக்கு, ஊர்க்காரர்கள் கொடுத்த உற்சாக வார்த்தைகள். இன்று, 50 அடி ஆழத்தில் ஒரு மாபெரும் ஏரியை உருவாக்கி, 120 ஏக்கர் நிலத்தை இயற்கை வேளாண்மை மூலம் பொன் விளையும் சொர்க்கபுரியாக மாற்றியிருக்கிறார், ராஜேஷ் நாயக்.

கர்நாடக மாநிலத்திலுள்ள, மங்களூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது, ஒட்டூர். இங்குதான் ராஜேஷுக்குச் சொந்தமான செம்பாறை நிலம் உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்னால் பாறை நிலப்பரப்பாக இருந்த இந்த பூமி, இன்று இந்தியாவிற்கே ஒரு வேளாண் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்பது, ஒரு தனிமனிதனின் உறுதிக்கும், உழைப்பிற்கும் உள்ள வலிமையின் எடுத்துக்காட்டு.

"அடிப்படையிலேயே, நான் விவசாயப் பரம்பரையைச் சார்ந்தவன். இந்த நிலம் எங்கள் பரம்பரைச் சொத்து. ஆனால் காலப் போக்கில் இது ஒன்றும் விளையாத நிலம் என்று இதை என் முன்னோர்கள் கைகழுவிவிட்டனர். அதற்குக் காரணம் இந்த நிலத்தில் பாறைகளின் ஊடுருவல். பாறைகள் நிறைந்திருப்பதால் இந்த நிலத்தில் எந்தப் பயிரின் வேராலும் நீரிழுக்க முடியாது. இதை அறிந்துகொண்ட போதுதான், இந்த நிலத்தின் முதல் தேவை ஒரு நீராதாரம் என்பது எண்ணத்தில் உதித்தது. முதலில் இங்கு ஒரு நீராதாரத்தை உருவாக்க வேண்டும் என்று நான் சொன்னபோது, அனைவரும் சிரித்தனர். நான் என் வேலையை விட்டுவிட்டு இந்த முயற்சியில் இறங்குவது தேவையற்ற ஆபத்தை வலிய இழுத்துவிட்டுக் கொள்வதாகும் என்றனர். நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. என் மனதின் குரலை மட்டுமே கேட்டுச் செயல்பட்டேன்" என்கிறார் ராஜேஷ்.

தொடர்ந்து அவர், "அதே சமயம் நீரை இந்த நிலத்திற்குள் செலுத்துவது, அசாத்தியமான ஒன்றாக இருந்தது. எனவேதான் இந்த ஏரியை உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கினேன். பல்வேறுபட்ட சிக்கல்களோடு, நிதிச் சிக்கலும் பெரிதாகவே இருந்தது. அனைத்தையும் பொறுத்துக் கொண்டு, மண்ணின் மீது நம்பிக்கை வைத்து இந்த ஏரியை அகழ்ந்தெடுத்தேன். இன்று இது 40,000 லிட்டர் தண்ணீருக்கும் மேல் கொள்ளளவு கொண்ட ஏரியாக உருவெடுத்து நிற்கிறது" என்று மார்தட்டுகிறார் ராஜேஷ்.



“என் நிலத்திற்கு வாய்க்கால் வழியாகத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு மட்டுமன்றி, அருகிலுள்ள அத்தனைப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் உறுதுணையாக இந்த ஏரி இருந்து வருகிறது. இதனால் இந்த ஏரிக்கு நேரெதிரில் இதைப்போலவே மற்றொரு ஏரி அமைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டேன்” என்று பூரிக்கிறார் ராஜேஷ்.

இயற்கை வேளாண்மை என்றாலே வயலோடு சேர்த்து முதலில் நினைவுக்கு வருவது மாடுகள் தானே? மாடுகளைப் போல ’மாடல்ல மற்றை யவை’ அல்லவா உழவர்களுக்கு! எனவேதான் தன் விவசாயத்தோடு சேர்த்து, 200 மாடுகளையும் வாங்கி மாட்டுப்பண்ணையை அருகிலேயே வைத்திருக்கிறார் ராஜேஷ். தன் நிலத்திலேயே, இவற்றின் தீவனத்தையும், புல் வகைகளையும் வளரவைத்திருக்கிறார். மொத்தத்தில் 800 லிருந்து 1000 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்கிறார். இந்தப் பாலை, கர்நாடக மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் கொள்முதல் செய்து கொள்கிறது.

இவரது வயலையும் பண்ணையையும் பார்த்தால், இது இரண்டாண்டுகளுக்கு முன் வறண்ட பூமியாக இருந்ததென்பதை நிச்சயம் நம்பமுடியாது. ஏரிக்கரையில் நடந்து கொண்டே அடுத்தடுத்த ஆச்சர்யங்களை விவரிக்கிறார் ராஜேஷ்.

’மாடுகள் தரும் பாலை, விற்றுவிடுகிறோம்; ஆனால் அதன் மற்ற வெளியேற்றங்களை என்ன செய்வது என்ற சிந்தனைதான் இந்த மின்னுற்பத்திக்கான மூலம்’ என்று வியப்பைக் கூட்டுகிறார். ’மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும், தண்ணீருடன் கலந்து, ஒரு பெரிய சேமிப்புக் கிடங்கில் ஊற்றி விடுகிறேன். இது இயற்கையாக காற்றிலுள்ள நுண்ணுயிரிகளுடன் கலந்து நொதித்துப் பொங்கும். அவ்வாறு நொதிக்கும் போது அதிலிருந்து மீத்தேன் வாயு வெளியேறும். அத்தகைய மீத்தேனை, சுற்றுப்புறத்தில் கலக்க விடாமல், ஒரு ராட்சதக் கூரையில் மடக்கி அந்த மீத்தேனை எரிவாயுவாகப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்கிறேன். இதன் மூலம் 60 கிலோவாட் வரை மின்சாரம் தயாரிக்க முடிகிறது. இந்த மின்சாரத்தை வைத்துத்தான் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுகிறேன்" என்று சொல்லுகிறார் இந்த விஞ்ஞான வேளாளர்.




ஏரியிலிருந்து நீர், நீரிலிருந்து பயிர்களும் தீவனமும்; தீவனத்தை வைத்து மாடுகள், மாடுகளிடமிருந்து பாலும், எரிவாயுவும்; எரிவாயுவை வைத்து நீர்ப்பாய்ச்சல் என ஒரு முழு விஞ்ஞான சுழற்சி முறையில் விவசாயம் பார்க்கும், ஆச்சர்ய மனிதராக நம் கண்முன் உயர்ந்து நிற்கிறார் ராஜேஷ் நாயக்.



"இது மிகவும் பயன்தரத்தக்க விவசாய அணுகுமுறை. இதை நாடெங்கும் அமல்படுத்தினால் நம் தண்ணீர் தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். 100 ஏக்கர் நிலத்திலேயே இவ்வளவு பயன் சாத்தியப்படும் போது, இந்தியாவிலுள்ள 400 மில்லியன் ஏக்கர்களில் இந்த முறை கையாளப்பட்டால் எவ்வளவு நன்மை தரும்? என்ற கேள்வி என்னைத் துளைத்துக் கொண்டேயிருக்கிறது. அதனால்தான் சுற்றுவட்டார கிராமங்களில் வேளாண் விரிவுரைகள் நிகழ்த்துகிறேன். இரண்டாவது ஏரியையும் இப்போது பொதுமக்களின் துணையோடு சிறுநில விவசாயிகளே தூர்வாரிக்கொண்டிருக்கிறோம்" என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் ராஜேஷ், urajeshnaik.com என்னும் வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார் என்பது வியப்பின் உச்சம்.

தண்ணீர் பற்றாக்குறையையும், நதிகளின் பின் நடக்கும் அரசியலையும் எண்ணி நொந்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, ராஜேஷ் நாய்க் போன்ற விவேக விவசாயிகள், ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தானே!

No comments:

Post a Comment